கேரளாவில் 'அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ்' நோய் பரவியுள்ள நிலையில், சபரிமலைக்கு வரும் பக்தர்கள் நீர்நிலைகளில் குளிக்கும்போது மூக்கிற்குள் நீர் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது போன்ற பல அறிவுறுத்தல்களை அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கேரளாவின் பல்வேறு பகுதிகளில் மூளை தின்னும் அமீபா என அழைக்கப்படும் 'அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ்' என்ற நோய் பரவி வருகிறது. இதற்கிடையே, சபரிமலையில் இவ்வாண்டு மண்டல -மகர விளக்கு பூஜைக்காக இன்று நடை திறக்கப்பட்டது. இதனால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் பல்லாயிரக்கானக்கான பக்தர்கள் சபரிமலைக்கு தரிசனத்திற்காக வந்து செல்லவுள்ளனர். இந்நிலையில், சபரிமலை செல்லும் பக்தர்கள் நீர்நிலைகளில் குளிக்கும்போது, மூக்கிற்குள் நீர் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுறுத்தல்களை அம்மாநில சுகாதாரத்துறை வழங்கி உள்ளது.
அதன்படி, மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்கள், அதற்கான ஆவணங்கள் மற்றும் மருந்துகளுடன் பயணிப்பது அவசியம், சபரிமலை யாத்திரை புறப்படும் முன், நடைபயிற்சி போன்ற எளிதான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும், கொதிக்கவைத்த நீரையே குடிக்க வேண்டும், மலை ஏறும் போது மெதுவாகவும், இடைவெளி விட்டும் ஏற வேண்டும், சபரிமலை வரும் வழியில் ஆறுகளில் குளிக்கும் போது மூக்குக்குள் நீர் செல்லாமல் பக்தர்கள் கவனமாக இருக்க வேண்டும் போன்ற அறிவுறுத்தல்களை கேரள மாநில சுகாதாரத்துறை வழங்கியுள்ளது.
Primary amebic meningoencephalitis எனப்படும் ஒரு தொற்று, மூளையை திண்ணும் அமீபா என்று கூறப்படும் Naegleria fowleri-ஆல் ஏற்படுகிறது. இந்த Naegleria fowleri அமீபாவானது சுத்தம் இல்லாத குளம் ஏரி, குளம், குட்டை போன்ற இடங்களில் வாழ்கிறது.
பராமரிப்பு இல்லாத, சுத்தம் இல்லாத ஏரி, குளம், குட்டை, தேங்கியுள்ள நீர்நிலைகள் போன்றவற்றில் இந்த வகை அமீபாக்கள் அதிகம் இருக்கும். நாம் அங்குசென்று குளிக்கும்போது, இவ்வகையான அமீபாக்கள் மூக்கின் வழியாக முளையை அடைந்து அங்குள்ள திசுக்களை முற்றிலுமாக அழித்து மூளையில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது.
பொதுவாக சுத்தம் இல்லாத ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைகளிலும், நீச்சல்குளம் போன்றவற்றிலும் போதுமான அளவு குளோரின் கலக்கப்படாததால் இந்த தொற்று பாதிப்பு ஏற்படுகிறது. இந்த அமீபா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 5 - 6 நாட்களில் ஆரம்ப அறிகுறியாக காய்ச்சல், தலைவலி, குமட்டல், வாந்தி, மயக்கம் ஆகியவற்றை உணர்வார்கள். இருப்பினும் இந்த பாதிப்பை உறுதிசெய்ய அதிக நாட்கள் ஆகும்.