இந்தியா

'பிராமணர்களும் பனியாக்களும் என் பாக்கெட்டில்' - பா.ஜ.க முரளிதர ராவ் பேச்சு

கலிலுல்லா

பிராமணர்களும், பனியாக்களும் என் பாக்கெட்டில் என பாஜக பொதுச்செயலாளரும், மத்திய பிரதேச பொறுப்பாளருமான முரளிதர ராவ் தெரிவித்துள்ளார்.

போபாலில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முரளிதர ராவ். ''பாஜக அரசு பட்டியலின மக்கள் மீது சிறப்பு கூடுதல் கவனம் செலுத்தும். இவையாவும் வாக்கு அரசியலுக்காக அல்ல; மாறாக, அவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு பின்தங்கிய நிலையை கருத்தில் கொண்டு அவர்களின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு செயல்படும்'' என்றார். அப்போது செய்தியாளர் ஒருவர், ''பா.ஜ.க பிராமணர்கள் மற்றும் பனியாக்களுக்கான கட்சி என்ற பார்வை இருக்கிறது. அப்படியிருக்கும் நீங்கள் எஸ்.சி. எஸ்.டி மக்களுக்கான சிறப்பு கூடுதல் கவனம் பற்றி பேசுகிறீர்கள்.

இதை எப்படி புரிந்துகொள்வது?'' என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்தவர், ''பிராமணர்களும் பனியாக்களும் என் பாக்கெட்டுகளில் இருக்கிறார்கள். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் நம்பிக்கையைப் பெறுவதற்காக பாஜக செயல்பட்டு வருகிறது. எஸ்சி/எஸ்டி பிரிவினரின் குறைந்த பிரதிநிதித்துவத்தைக் கண்டறிந்து, எங்கள் கட்சியில் மேலும் பலரை சேர்க்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். பாஜகவை அனைத்து பிரிவினருக்குமான கட்சியாக மாற்றவேண்டும்" என்று அவர் கூறினார்.