இந்தியா

“சகோதரிகள் படிக்கவேண்டுமே”- தனது படிப்பை விட்டுவிட்டு டீ விற்கும் சிறுவன்

Sinekadhara

சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் சாலையோர உணவுக்கடை நடத்திவரும் ஒரு 80 வயது முதியவரின் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வைரலானது. அவரின் வறுமைநிலையை எடுத்துரைத்த அந்த வீடியோவை பல நட்சத்திரங்களும் பகிர்ந்திருந்தனர். அதேபோல் தற்போது தன் சகோதரிகளின் ஆன்லைன் வகுப்பு பாதித்துவிடக் கூடாது என்பதற்காக டீ விற்கும் ஒரு சிறுவனின் புகைப்படங்களை ஏஎன்ஐ வெளியிட்டுள்ளது.

மும்பையைச் சேர்ந்த 14 வயது சிறுவன் சுபன், தனது தாயாருக்கு உதவியாக பேந்தி பஜார் பகுதியில் டீ விற்றுவருகிறார். 12 வருடங்களுக்கு முன்பே சுபனின் தந்தை இறந்துவிட்டார். அதன்பிறகு சுபனின் தாயார் ஒரு தனியார் பள்ளி பேருந்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்திருக்கிறார். ஊரடங்கு காரணமாக வேலையில்லாத காரணத்தால் வீட்டின் வருமானம் தடைபட்டிருக்கிறது. சுபனுக்கு இரண்டு சகோதரிகள் இருப்பதால், அவர்களின் படிப்பு பாதிப்படைந்துவிடக்கூடாது என்பதைக் கருத்தில்கொண்டு தான் இந்த தொழிலில் இறங்கியிருப்பதாகக் கூறுகிறார் இந்த சிறுவன்.

மேலும் இவருக்கு சொந்தமாக கடை இல்லாதக்காரணத்தால் பேந்தி பஜார் பகுதியில் உள்ள ஒரு கடையில் டீப்போட்டு, அதை அந்தப்பகுதி தவிர நாக்பாடா உள்ளிட்ட மற்ற பகுதிகளிலும் விற்றுவருகிறார். இதன்மூலம் ஒரு நாளைக்கு ரூ.300 - ரூ.400 சம்பாதிப்பதாகவும், தினமும் பணத்தை வீட்டில் கொடுத்து தாயாருக்கு உதவிவருவதாகவும் கூறுகிறார். அதில் சிறிது தொகையை சேமித்துவருவதாகவும், பள்ளிகள் திறந்தபின்பு தனது படிப்பைத் தொடரப்போவதாகவும் கூறுகிறார் சுபன்.