ஐ லவ் யூ சொன்ன நபருக்கு சிறைத்தண்டனை web
இந்தியா

'I love U' சொல்வது பாலியல் துன்புறுத்தல் அல்ல.. 3 ஆண்டு சிறை தண்டனையை ரத்துசெய்த நீதிமன்றம்!

தவறான நோக்கம் இல்லாமல், "ஐ லவ் யூ" என்று சொல்வது பாலியல் துன்புறுத்தலாகாது என்றும், அது உணர்வுகளின் வெளிப்பாடு மட்டுமே என்றும் மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

Rishan Vengai

2017-ம் ஆண்டு நாக்பூர் கட்டோலைச் சேர்ந்த 25 வயது இளைஞர், 17 வயது சிறுமியின் கைகளை பிடித்து இழுத்து ’ஐ லவ் யூ’ சொன்னதற்காக பாலியல் துன்புறுத்தல் பிரிவின் கீழ் மூன்று ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் நடந்து கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு நீதிபதி ஊர்மிளா ஜோஷி பால்கே அந்த இளைஞரை குற்றமற்றவர் என்று விடுவித்துள்ளார்.

ஐ லவ் யூ

முந்தைய நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த இளைஞர் ஜாமீனில் வெளியே வந்து வழக்கை தொடர்ந்துள்ளார்.

’ஐ லவ் யூ’ பாலியல் துன்புறுத்தல் ஆகாது..

கடந்த 2015-ம் ஆண்டு 11-ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்து ‘ஐ லவ் யூ’ சொன்னதற்காக 25 வயது இளைஞர் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு போடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், அந்த நபர் தன்னையும் தனது உறவினரையும் தடுத்து நிறுத்தியதோடு, தனது கையைப் பிடித்து, "நான் உன்னை காதலிக்கிறேன்" என்று கூறியதாக குற்றம் சாட்டினார். பெண்ணின் புகாரின் அடிப்படையில், அந்த இளைஞர் மீது ஐபிசி பிரிவுகள் 354A (பாலியல் துன்புறுத்தல்) மற்றும் 354D (பின்தொடர்தல்) மற்றும் போக்சோ சட்டத்தின் பிரிவு 8 ஆகியவற்றின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

பின்னர் அவருக்கு 2017-ம் ஆண்டு நீதிமன்றம் 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த இளைஞர் 8 ஆண்டுகளுக்கு பிறகு சிறைத்தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு நீதிபதி ஊர்மிளா ஜோஷி பால்கே அந்த இளைஞரை குற்றமற்றவர் என்று விடுவித்தார். தீர்ப்பின்போது பேசிய அவர், “குற்றம் சாட்டப்பட்டவர் பாலியல் நோக்கத்துடன் சிறுமியைத் தொட்டதாக எந்தக் குற்றச்சாட்டும் இல்லாததால், போக்சோ சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்படவில்லை. மேலும் "ஒருவர் வேறொரு நபரைக் காதலிப்பதாகக் கூறினால் அல்லது தனது உணர்வுகளை வெளிப்படுத்தினால், அது பாலியல் நோக்கத்துடன் சொல்லப்படுவது கிடையாது. ஐ லவ் யூ என்று வெளிப்படுத்தப்படும் வார்த்தைகள் உணர்வுகளின் வெளிப்பாடாக சொல்லப்படுவது மட்டுமே” என்றும் கூறியுள்ளார்.