இந்தியா

காலையில் ட்வீட்.. மாலையில் உதவி: ஆந்திர விவசாயிக்கு டிராக்டர் வழங்கிய சோனு சூட் !

webteam

ஆந்திராவில் நிலத்தை உழவு செய்வதற்கு தன்  சொந்த மகள்களைக் கட்டாயப்படுத்திய விவசாயி ஒருவரின் செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்த  பாலிவுட் நடிகர் சோனு சூட், “ஒரு டிராக்டரை அவர்களுக்கு அனுப்பிவைக்கலாம்” என ட்வீட் செய்திருந்தார். அதன்படியே புதிய டிராக்டர் ஒன்றையும் அனுப்பிவைத்து  விவசாயி குடும்பத்தை மகிழ்ச்சி வெள்ளத்தில் திக்குமுக்காட வைத்துவிட்டார்.

சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த விவசாயிக்கு மாடுகளைக் கொண்டு உழுவதற்கு போதுமான பண  வசதியில்லை. ஊரடங்கு காரணமாக வருமானமும் குறைந்துவிட்டது. கையில் அரைக்காசு இல்லாமல் தவித்த விவசாயி, தன் மகள்களைக் கட்டாயப்படுத்தி உழவைத்தார்.

அந்த வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்து கருத்துத் தெரிவித்த நடிகர் சோனு சூட், “நாளை காலையில் அவர்களுக்கு உழவு மாடுகள் கிடைத்துவிடும். நாளை முதல் இரு மாடுகளும் நிலத்தை உழட்டும். மகள்கள் கல்வியில் கவனம் செலுத்தட்டும். விவசாயிகள் நம் நாட்டின் பெருமை” என்று கூறியிருந்தார். மறுபடியும் வெளியிட்ட பதிவில், புதிய டிராக்டர் ஒன்றை   வழங்கலாம் என்றும் விருப்பம் தெரிவித்தார். 

நடிகர் சோனு சூட் செய்த உதவிக்கு விவசாயி குடும்பத்தினர் கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தனர்.