இந்தியா

பாலிவுட் நடிகர் மரணம்... நண்பரின் மனைவி கொடுத்த புதிய புகாரால் அடுத்த புயல்!

பாலிவுட் நடிகர் மரணம்... நண்பரின் மனைவி கொடுத்த புதிய புகாரால் அடுத்த புயல்!

webteam

பிரபல பாலிவுட் நடிகர் மற்றும் இயக்குநரான சதீஷ் சந்திர கவுசிக் மரணத்தில், அவரது நண்பர் விகாஸ் மாலுவின் 2வது மனைவி அளித்திருக்கும் புகார் அடுத்த புயலைக் கிளப்பியிருக்கிறது.

பிரபல பாலிவுட் நடிகர் மற்றும் இயக்குநரான சதீஷ் சந்திர கவுசிக், கடந்த மார்ச் 9ஆம் தேதி அதிகாலை மரணமடைந்தார். கடந்த வாரம், ஹோலி கொண்டாட்டத்துக்காக டெல்லியில் உள்ள அவரது நண்பரும் தொழிலதிபருமான விகாஸ் மாலு என்பவரது பண்ணை வீட்டில் தங்கியிருந்தார் கவுசிக். அன்று நள்ளிரவு மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கவுசிக், அதிகாலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

மாரடைப்பு காரணமாக கவுசிக் இறந்ததாக பிரேதப் பரிசோதனை அறிக்கை தெரிவித்தாலும், பண்ணை வீட்டில் போலீசார் கைப்பற்றிய சில மருந்துப் பொருட்கள் கவுசிக் மரணத்தின் மீது ஐயத்தை உருவாக்கியிருந்தது. இந்த நிலையில், விகாஸ் மாலு என்பவரது 2வது மனைவியான சான்வி, போலீசில் சொல்லியிருக்கும் புகார் அடுத்த புயலைக் கிளப்பியிருக்கிறது.

இதுகுறித்து சான்வி, “சதீஷ்ஜிக்கும், எனது கணவருக்கும் (விகாஸ்) இடையே வர்த்தக தொடர்புகள் இருந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், சதீஷ் ஜி கொடுத்த ரூ.15 கோடியைத் திருப்பித் தரும்படி எனது கணவரிடம் கேட்டார். ஆனால், எனது கணவர் ‘இந்தியாவில் வைத்து தொகையை திருப்பித் தருகிறேன்’ எனச் சொன்னார். சதீஷிடமிருந்து வாங்கிய ரூ.15 கோடியை விகாஸ் திருப்பித் தராது இழுத்தடித்தார். அண்மையில் துபாயில் வைத்து இதுதொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்னை எழுந்தது. கொரோனா காலத்தில் ஏற்பட்ட இழப்பால், பணத்தைத் திருப்பித் தரும் மனநிலையில் என் கணவர் இல்லை. சதீஷை தனது கட்டுப்பாட்டில் வைக்க புளூ பில்ஸ் மற்றும் ரஷிய அழகிகளை பயன்படுத்தியதாக எனது கணவர் ஏற்கனவே தெரிவித்திருக்கிறார்.

அதனாலேயே, இந்த விவகாரத்தில் முறையான விசாரணை நடத்த வேண்டும்” என போலீசில் தெரிவித்துள்ளார். முன்னதாக, விகாஸ் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்து, கட்டாயப்படுத்தி திருமணம் செய்துகொண்டதாக சான்வி புகார் அளித்திருந்தார். அந்த புகாரில், “விகாஸின் மகனும் என்னைப் பாலியல் வன்கொடுமை செய்ய தொடங்கினார். இதனை முற்றிலும் தாங்கிக்கொள்ள முடியாமல் கடந்த அக்டோபரில் வீட்டைவிட்டு வெளியேறினேன்” என்று அவர் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.