இந்தியா

பாஜக எம்பி தேஜஸ்வியின் பழைய பதிவினால் எழுந்த புதிய சர்ச்சை

பாஜக எம்பி தேஜஸ்வியின் பழைய பதிவினால் எழுந்த புதிய சர்ச்சை

webteam

தன்பாலின திருமணம் குறித்து கடந்த வருடம் பதிவிட்ட ட்விட்டரை பதிவை குறிப்பிட்டு பாஜக எம்பிக்கு பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

28 வயதான தேஜஸ்வி சூர்யா நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் பெங்களூரு தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். வழக்கறிஞரான தேஜஸ்வி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை 331192 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். தற்போது எம்பியாக நாடாளுமன்றத்தில் கால்பதித்துள்ள தேஜஸ்விக்கு ட்விட்டர் வாசிகள் தற்போது தன்பாலின திருமணம் குறித்த கோரிக்கை ஒன்றை கொடுத்து வருகின்றனர். அதற்கு காரணம் தேஜஸ்வி 2018ம் ஆண்டு பதிவிட்ட ட்விட்டர் பதிவுதான்.

அதாவது கடந்த வருடம் தேஜஸ்வி தன்பாலின திருமணம் குறித்த கருத்து ஒன்றை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். அதில் ''சட்டப்பூர்வ கோரிக்கைகளின் அடிப்படையை பின்பற்றியே தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று சிலர் கவலையை வெளிப்படுத்துகிறார்கள். திருமணம், பரம்பரையாக தொடரும் தலைமுறைகள் இவையெல்லாம் சட்டத்தின் மூலமாகவா தொடங்கப்பட்டன?  அப்படி இருக்க தன்பாலின திருமணத்துக்கு மட்டும் ஏன்? எல்லாம் இயற்கையின் விளைவுகளே'' என்று தெரிவித்திருந்தார்.

தற்போது அந்த ட்விட்டை கிளறி எடுத்த பாலிவுட் திரைத்துறையை சேர்ந்த சிலர் ''தற்போது எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ள தேஜஸ்வி, நிச்சயம் தன்பாலின திருமணத்துக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பார்'' என்று தெரிவித்து வருகின்றனர்.  இன்னும் சிலர் ''சரியான பார்வை. பாஜகவைச் சேர்ந்த நீங்கள்தான்  தன்பாலின திருமணத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.