இந்தியா

"பொருளாதார பாதிப்புகளில் இருந்து மீள துணிச்சலான சீர்திருத்தங்கள் தேவை" ரகுராம் ராஜன் !

jagadeesh

கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு அடிமட்ட அளவில் மிகவும் துணிச்சலான சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

பொருளாதார பாதிப்புகள் குறித்து ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் "லிங்க்டுஇன்" வலைதளத்தில் உரையாடியபோது இதனை தெரிவித்தார். அப்போது, பேசிய அவர், ரிசர்வ் வங்கியின் இருப்புநிலையை விரிவுபடுத்துவதற்கான இடம் எல்லையற்றது அல்ல என்றும் பணவீக்கத்தை கண்காணிப்பதில் ரிசர்வ் வங்கி அதிகம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும், துணிச்சலான சீர்திருத்தங்கள் மூலம் அசுரப் பலத்தைப்போன்ற உத்வேகம் உருவாக்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக வளர்ச்சியில் சரிவு காரணமாக இந்தியா தற்போது மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் பலவீனமாகக் காணப்படுவதாக ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்று நோய் காரணமாக பொருளாதார வளர்ச்சி அடுத்த நிதியாண்டில் 9 புள்ளி 5சதவிகிதம் பின்னடைவைச் சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் ரகுராம்ராஜன் தெரிவித்துள்ளார்.