ஆந்திராவில் கொரோனாவால் உயிரிழந்த 70 வயது முதியவர் உடலை பொக்லைன் இயந்திரம் மூலம் அடக்கம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் வசித்து வந்த 70 வயது முதியவர் ஒருவர் கொரோனா அறிகுறியுடன் கடந்த வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த நகராட்சி, வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து வைரஸ் பரவாமல் தடுக்க உள்ளூர் பகுதிகளைச் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, பாலாசா நகராட்சி நிர்வாகம் சார்பில் அவரது உடலை அடக்கம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஊழியர்கள் முதியவரின் உடலைத் தொடாமல் பொக்லைன் இயந்திரம் மூலம் அவரை அடக்கம் செய்தனர். அந்த முதியவருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்ட நிலையில் இன்னும் முடிவு வெளியாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து கொரோனா நெறிமுறைகளை மீறிய இந்த மனிதாபிமானமற்ற செயலை விசாரித்து நடவடிக்கை எடுக்க முதல்வர் அலுவலகம் மாவட்ட ஆட்சியர் ஜே.நிவாஸுக்கு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையர் பி.நாகேந்திர குமார் மற்றும் சுகாதார ஆய்வாளர் என்.ராஜீவ் ஆகிய இருவரையும் பணி இடை நீக்கம் செய்துள்ளார். இதேபோல் சோம்பேட்டாவில் கொரோனா அறிகுறிகளால் உயிரிழந்த 70 வயது மூதாட்டியின் உடலைக் குப்பை அள்ளும் பஞ்சாயத்து டிராக்டரை பயன்படுத்திப் புதைக்கப்படும் இடத்திற்கு அதிகாரிகள் கொண்டு சென்றுள்ளனர். இறந்தவரின் உடலைப் புதைப்பதற்குச் சுற்றத்தார் முன்வராததால் குடும்ப உறுப்பினர்கள் பஞ்சாயத்து அலுவலகத்தை அணுகியதாகத் தெரிகிறது.
இதையடுத்து குடும்ப உறுப்பினர்களின் சம்மதத்துடன், மூதாட்டியின் உடலானது பஞ்சாயத்து டிராக்டரில் வைத்து புதைகுழிக்கு எடுத்துச்செல்லப்பட்டது. இறந்தவரின் உறவினர்களும் அதே டிராக்டரில் புதைகுழிக்குச் சென்று இறுதிச் சடங்குகளைச் செய்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து அறிந்த முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்காகச் சம்பந்தப் பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.