இந்தியா

3 முறை ஆற்றில் குதித்து 3 பேரை காப்பாற்றிய தைரிய சிறுவன்!

3 முறை ஆற்றில் குதித்து 3 பேரை காப்பாற்றிய தைரிய சிறுவன்!

webteam

பிரம்மபுத்திரா ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் தத்தளித்த தாய் உள்ளிட்ட 3 பேரை துணிச்சலுடன் காப்பாற்றிய ஆறாம் வகுப்பு மாணவனுக்குப் பாராட்டுகள் குவிந்துவருகிறது.

அசாம் மாநிலம் வடக்கு கவுகாத்தியில் இருந்து கவுகாத்தி நகருக்கு, பிரம்மபுத்திரா ஆற்றைக் கடந்து படகில் செல்வது வழக்கம். இதற்காக பல பயணிகள் படகு அங்கு உள்ளன. கடந்த புதன்கிழமை வழக்கம் போல பயணிகளுடன் படகு சென்றது. அதில் 40 பேர் இருந்தனர். அதில் வடக்கு கவுகாத்தில் உள்ள செயின்ட் அந்தோணி பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் கமல் கிஷோர் தாஸ் என்ற சிறுவனும் இருந்தான். அவன் அம்மா, அத்தை ஆகியோரும் படகில் இருந்தனர். படகு சென்றுகொண்டிருந்தபோது திடீரென்று கவிழ்ந்தது. இதில் பலர் ஆற்றில் மூழ்கினர். கமல் கிஷோரை அவனது அம்மா, எப்படியாவது நீந்தி கரைக்குப் போய்விடு என்று சொன்னார். நீந்தி கரைக்குச் சென்றான் கமல்.

அங்கிருந்து திரும்பிப் பார்த்தால் அம்மாவைக் காணவில்லை. அதிர்ச்சி அடைந்த சிறுவன் மீண்டும் ஆற்றுக்குள் குதித்து, படகு கவிந்த இடத்துக்கு வந்தான். அங்கு தத்தளித்துக் கொண்டிருந்த அம்மாவைக் கண்டதும் அவளது தலைமுடியை இழுத்து அருகில் உள்ள மேடான பகுதிக்குத் தள்ளிக்கொண்டு போனான். தலைமுடியை இழுப்பதால் அம்மாவுக்கு வலிக்கிறது என்பதை உணர்ந்த கமல் பிறகு கையை பிடித்து இழுத்து மேடான பகுதிக்கு கொண்டு விட்டான். பிறகு அத்தையை காணவில்லை என்பது தெரிந்தது. உடனடியாக ஆற்றுக்குள் குதித்து அத்தையை தேடினான். அதே போல அவரையும் கரைக்கு இழுத்துவந்தான். இன்னொருவரின் உயிரையும் அப்படியே காப்பாற்றினான் கிஷோர்.

தனது தைரியத்தால் மூன்று பேர் உயிரை காப்பாற்றிய கமல் கிஷோருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இதுபற்றி கமல்கிஷோர் கூறும்போது, ’நான் இந்த ஆற்றில் ஞாயிறு மற்றும் புதன்கிழமைகளில் நீச்சல் பயிற்சி பெற்று வருகிறேன். அதனால் தான் என்னால் அவர்களை காப்பாற்ற முடிந்தது. என் அம்மாவுக்கு நீச்சல் தெரியாது. அதனால் உடனடியாக போய் காப்பாற்றினேன். படகில் இருந்த விழுந்த பர்கா அணிந்திருந்த ஒரு பெண், தன் குழந்தையை கையில் வைத்துக்கொண்டு தத்தளித்தார். அவர் காப்பாற்றப்பட்டார் என்றாலும் அவர் குழந்தை தண்ணீருக்குள் விழுந்துவிட்டது. என்னால் காப்பாற்ற முடியவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது’ என்றான்.

‘நான் என் மகனுக்கு கடமைப்பட்டிருக்கிறேன். அவன் தன்னைக் காப்பாற்றிக்கொள்வான் என்பது எனக்குத் தெரியும். அதனால்தான் அவனை நீந்தி சென்றுவிடும்படிச் சொன்னேன்’ என்றார் கமலின் அம்மா ஜிதுமோனி தாஸ்.