இந்தியா

ராஜஸ்தான்: காலணிக்குள் ப்ளூடூத் பொருத்தி ஆசிரியர் தகுதித் தேர்வில் மோசடி

EllusamyKarthik

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில், காலணிக்குள் ப்ளூடூத் பொருத்தி தகுதித் தேர்வு எழுத வந்தவர் மோசடி செய்தது அம்பலமாகி உள்ளது. இது தொடர்பாக போலீசார் சம்பந்தப்பட்டவரிடம் விசாரித்ததில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அஜ்மீரில் உள்ள பள்ளி ஒன்றில் 28 வயதான கணேஷ் ராம் தாகா தேர்வு எழுத வந்துள்ளார். அவரிடம் வழக்கத்திற்கு மாறாக காதில் சிறிய அளவிலான ப்ளூடூத் ஹெட்போன் இருந்ததை அந்த தேர்வு மையத்தில் இருந்த கண்காணிப்பாளர்கள் கவனித்துள்ளனர். அவரிடம் இது குறித்து கேள்வி கேட்டபோது, தன்னிடம் செல்போன் இருப்பதையும், காலணிக்குள் ப்ளூடூத் கருவி இருப்பதையும் ஒப்புக் கொண்டுள்ளார். அதோடு தனக்கு இந்த தேர்வை எழுத வெளியில் இருக்கும் நபர்கள் உதவியதாக ஒப்புக் கொண்டுள்ளார். அவர்களிடம் தொடர்பு கொள்ளதான் இந்த ப்ளூடூத் ஏற்பாடாம். 

பிகானேர் பகுதியை சேர்ந்த துல்ஜாராம் ஜாட் என்பவரிடமிருந்து இந்த காலணியை சுமார் 2.5 லட்ச ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

“ப்ளூடூத் காலணி மூலமாக தேர்வு எழுதுபவர்களுக்கு உதவி செய்த ஐந்து பேர் கொண்ட குழு கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் பெண். அவர்கள் இடத்திலிருந்து மொத்தம் 25 ப்ளூடூத் காலணி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என போலீசார் தெரிவித்துள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தகுதித் தேர்வில் செல்போன் மற்றும் இன்டர்நெட் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.