‘ப்ளூ வேல்’ என்ற வீடியோ கேம் உலக அளவில் இளைஞர்களின் வாழ்வுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறிவருகிறது.
மேற்கு வங்க மாநிலத்தின் மித்னாபூர் பகுதியைச் சேர்ந்தவர் அங்கன் தே என்ற 10 ஆம் வகுப்பு மாணவன் ‘ப்ளூ வேல்’ கேம்-க்கு அடிமையாக இருந்துள்ளார். பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்த அங்கன் வீட்டில் இருந்த கணினியின் முன்பு சிறிது நேரம் அமர்ந்துள்ளார்.
பின்னர் குளிக்க சென்றுவிட்டு சாப்பிட வருவதாக கூறிய மாணவன், நீண்ட நேரம் ஆகியும் கதவை திறக்காததால் சந்தேகமடைந்த அவனது பெற்றோர் குளியலறையின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, மாணவர் பிளாஸ்டிக் கவர்களால் நைலான் கயிறுபோல் செய்து, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த விளையாட்டால் இதுவரை சுமார் 150 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விளையாட்டால் தற்போது இந்தியாவிலும் தற்கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. சமீபத்தில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் ‘ப்ளூ வேல்’ விளையாட்டால் 13 வயது சிறுவன் ஒருவன் பள்ளியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.