இந்தியா

பிரதமரின் ஹெலிகாப்டரை சுத்துப்போட்ட கருப்பு பலூன்கள்! ஆந்திராவில் பரபரப்பு

ஜா. ஜாக்சன் சிங்

பிரதமர் நரேந்திர மோடியின் ஹெலிகாப்டருக்கு அருகே ஏராளமான கருப்பு பலூன்கள் பறந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் பாஜக செயற்குழுக் கூட்டம் இரண்டு நாட்களாக நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு தொண்டர்கள் இடையே உரையாற்றினார். செயற்குழுக் கூட்டம் முடிவடைந்ததை அடுத்து, நரேந்திர மோடி இன்று டெல்லி திரும்பினார். இதற்காக ஹைதராபாத்தில் இருந்து ஆந்திராவின் விஜயவாடாவுக்கு இன்று மாலை வந்த அவர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டார்.

பிரதமரின் ஹெலிகாப்டர் பறக்க தொடங்கிய 5 நிமிடங்களில் 50-க்கும் மேற்பட்ட கருப்பு பலூன்கள் அவரது ஹெலிகாப்டர் அருகே பறந்து சென்றன. பிரதமர் மோடி ஆந்திராவுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸார் இன்று மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பிரதமரின் ஹெலிகாப்டர் வரும் திசையை நோக்கி அவர்கள் கருப்பு பலூன்களை பறக்கவிட்டிருக்கின்றனர்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரதமரின் ஹெலிகாப்டருக்கு அருகே பலூன்கள் பறந்தது அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து விஜயவாடா போலீஸார் வழக்கு பதிவு செய்து 4 காங்கிரஸ் தொண்டர்களை கைது செய்தனர்.