மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி கடந்த பிப்ரவரி மாதம் விடுதலை செய்யப்பட்டார். இதை ஆம் ஆத்மி கட்சியினர் கொண்டாடி மகிழ்ந்தனர். ஆனால், இந்தக் கொண்டாட்டத்தில் அவரது கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்பியான ராகவ் சத்தா பங்கேற்கவில்லை. இதனால், ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவராக இருந்த ராகவ் சத்தாவுக்கும், கட்சித் தலைமைக்கும் (அரவிந்த் கெஜ்ரிவால்) இடையில் சில காலமாகவே பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. தொடர்ச்சியாக ஆம் ஆத்மி மாநிலங்களவை துணைத்தலைவர் பதவியில் இருந்தும் ராகவ் சத்தா நீக்கப்பட்டார்.
இந்தநிலையில் தான், ராகவ் சத்தா, அசோக் மிட்டல் மற்றும் சந்தீப் பதக் உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சியைச் சார்ந்த 7 எம்.பி-கள் டெல்லியில் பாஜக கட்சித் தலைவர் நிதின் நபின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர். ஆம் ஆத்மியில் உள்ள10 மாநிலங்களவை எம்.பி-களில் 7 பேர் பாஜகவில் இணைந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 3ல் 2 பங்கு உறுப்பினர்கள் மாற்றுக் கட்சியில் இணையும்போது அவர்கள் மீது கட்சித் தாவல் நடவடிக்கை சட்டம் பாயாது. இதனால், ராகவ் சத்தா மீது நடவடிக்கையும் எடுக்க முடியாது.
இதற்கிடையில், இளைஞர்கள் மற்றும் 'Gen Z' தலைமுறையினர் மத்தியில் பிரபலமானவராக இருந்த ராகவ் சத்தா, கட்சி மாறியதை விரும்பாத பல இளைஞர்கள் #UnfollowRaghavChadha என்ற பிரச்சாரத்தைத் தொடங்கி அவரைப் பின்தொடர்வதைத் தவிர்த்து வருகின்றனர். இதன்மூலம், பாஜகவில் இணைந்த 24 மணிநேரத்தில் இஸ்டாகிராமில் 10 லட்சம் பேர் அவரை பின் தொடர்வதை நிறுத்தியிருக்கின்றனர். பாஜகவில் இணைவதற்கு முன் 14.6 மில்லியனாக இருந்த அவரது பின்தொடர்பாளர்கள் தற்போது 13 மில்லியனுக்கும் கீழ் சரிந்துள்ளனர்.
இந்தசூழலில் தான், எம்பி ராகவ் சத்தா, சமூக வலைதளங்களில் தனக்கு எதிராக எழுந்துள்ள விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் "மனதிலிருந்து" என்ற தலைப்பில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ”ஒரு மனிதர் தவறு செய்யலாம்; இரண்டு பேர் கூடத் தவறு செய்யலாம். ஆனால், ஏழு எம்பிக்களும் ஒரே நேரத்தில் தவறான முடிவை எடுக்க முடியாது. நாங்கள் அனைவரும் தீர்க்கமாக யோசித்தே இந்த முடிவை எடுத்துள்ளோம். ஆம் ஆத்மி கட்சி இப்போது அதன் அடிப்படை கொள்கையிலிருந்து விலகிவிட்டது" எனத் தெரிவித்திருக்கிறார்.