பிரகாஷ் ராஜ் கலந்து கொண்ட நிகழ்ச்சி மேடையை பசுவின் கோமியம் கொண்டு பாஜக இளைஞர் அமைப்பினர் சுத்தம் செய்துள்ளனர்.
சமீபகாலமாகவே பிரதமர் மோடி மற்றும் பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக விமர்சித்து வருபவர் நடிகர் பிரகாஷ் ராஜ். பிரதமர் மோடி தன்னை விட சிறந்த நடிகர் என கூறி எதிர்ப்பையும் ஆதரவையும் பெற்றார். நேற்று கர்நாடக மாநிலம் சிர்சி பகுதியில் நமது அரசியலமைப்பு, நமது உரிமை என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக பிரகாஷ் ராஜ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், பாஜகவை கடுமையாக விமர்சித்தார்.
இதனை அறிந்து கொண்ட பாஜகவின் சிர்சி பகுதி இளைஞர் அமைப்பு பசுவின் கோமியத்தைக் கொண்டு வந்து அந்த மேடையை கழுவியது. ஏன் என வினவியபோது , ”சிர்சி பகுதி மிகவும் புனிதமான பகுதி, ஆனால் சில தீய சக்திகள் இந்த மேடையில் வந்து பேசியதால், புனிதம் கெட்டுப் போகலாம்” என தெரிவித்தனர்.
இதனை செய்தித்தாள்களில் படித்து தெரிந்து கொண்ட பிரகாஷ் ராஜ், நான் செல்லும் இடமெல்லாம் புனிதமாக கருதப்படும் பசுவின் கோமியத்தை கொண்டு சுத்தம் செய்யும் சேவையை தொடர்வார்களா..? என கேள்வி எழுப்பியுள்ளார்.