கொல்கத்தாவில் காவல்துறை தலைமை அலுவலகத்தில் அத்துமீறி நுழைய முயன்ற பாஜகவினர் மீது கண்ணீர் புகை குண்டு வீசி கலைத்தனர்.
அண்மையில் நிறைவடைந்த மக்களவைத் தேர்தலில், பாஜக 18 தொகுதிகளை கைப்பற்றிய நிலையில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களிடையே ஆங்காங்கே தகராறு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் பரிஷத் மக்களவைத் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய வெற்றி பேரணியின் போது கலவரம் மூண்டது. பாஜக கொடி கம்பங்கள் அகற்றப்பட்ட நிலையில், பல கடைகள், வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன.
இந்த வன்முறையின்போது பாஜகவைச் சேர்ந்த இருவரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டனர். இதனிடையே, இறந்தவர்கள் உடல்களை கொல்கத்தா நோக்கி பேரணியாக கொண்டு செல்ல முயன்ற பாஜகவினரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் அவர்கள் உடல்கள் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
இந்நிலையில் வன்முறையை கண்டித்து பாஜகவினர் இன்று காவல் தலைமை அலுவலகம் நோக்கி பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது காவல்துறையின் தடுப்பை மீறி பாஜகவினர் காவல்துறை தலைமை அலுவலகத்தில் நுழைய முயன்றனர்.
இதையடுத்து கலவரம் வெடித்ததால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மேலும் பைப் மூலம் தண்ணீர் பாய்ச்சியும் கண்ணீர் புகை குண்டு வீசியும் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர். அதற்கு பாஜகவினரும் கற்களையும், சோடா பாட்டில்களையும் வீசினர். மேலும் சிலர் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.