இந்தியா

மேற்கு வங்கத்தில் பாஜக உறுப்பினர் மர்மமான முறையில் உயிரிழப்பு !

மேற்கு வங்கத்தில் பாஜக உறுப்பினர் மர்மமான முறையில் உயிரிழப்பு !

webteam

6 ஆம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் மேற்கு வங்காளத்தின் பழங்குடியின ஆதிக்கம் கொண்ட ஜார்கிராம் மாவட்டத்தில் நேற்று இரவு பாஜக உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் தான் காரணம் என பாஜகவினர் குற்றம் சாட்டுகின்றனர்.

17-ஆவது மக்களவைத் தேர்தலில் இதுவரை 5 கட்டங்களாக 424 தொகு‌திகளில் வாக்குப்பதிவு முடிந்துள்ளது. இந்நிலையில் 59 தொகுதிகளில் இன்று ஆறாவது கட்டத்தேர்தல் நடைபெற்று வருகிறது. உத்திரபிரதேசம், ஹரியானா, பீகார், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், ஜார்கண்ட் ஆகிய 7 மாநிலங்களில் 6 ஆம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. 

இதில், மேற்கு வங்கத்தில் ஜார்கிராம், தம்லுக், காந்தி, கட்டல், மெதினிபூர், பன்குரா, பிஷ்னுபூர், புருலியா ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு ஏராளமான பாதுகாப்புபடை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 5 ஆம் கட்ட தேர்தலிலும் மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் வன்முறைகள் அரங்கேறின. 

இந்நிலையில், மேற்கு வங்காளத்தின் பழங்குடியின ஆதிக்கம் கொண்ட ஜார்கிராம் மாவட்டத்தில் நேற்று இரவு பாஜக உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரிணாமுல் காங்கிரசார் அவரது வீட்டில் நுழைந்து அவரை கொன்றுவிட்டதாக பாஜக தலைவர் கைலாஷ் விஜய்வர்கியா குற்றம்சாட்டியுள்ளார். இதையடுத்து அப்பகுதி பதற்றம் நிறைந்த பகுதியாக காட்சியளிக்கிறது. 

இதேபோல், பகபந்த்பூர் மற்றும் மெதினிபூரில் பாஜவினர் இரண்டு பேர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.