ராகுல் காந்தி, ஸ்மிருதி இரானி
ராகுல் காந்தி, ஸ்மிருதி இரானி ட்விட்டர்
இந்தியா

'flying kiss' சர்ச்சையில் ராகுல்; பாஜக பெண் எம்பிக்களின் புகாரும் காங். தலைவர்களின் எதிர்வினையும்!

Prakash J

ராகுலுக்கு ஸ்மிருதி இரானி பதிலடி

மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தன. இதன்மீது இரண்டாவது நாளாக இன்றும் விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, காரசாரமாகப் பேசினார். இதற்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியும் பதிலளித்தார்.

இதையும் படிக்க: “மணிப்பூரில் பாரத மாதாவை கொன்றுவிட்டீர்கள்”- மக்களவையில் ராகுல் காந்தி ஆவேச பேச்சு!

ராகுல் காந்தி

பறக்கும் முத்தம் கொடுத்ததாகக் குற்றச்சாட்டு

அப்போது பேசிய அவர், "எனக்கு முன் பேசிய நபர் (ராகுல்) அவையில் இருந்து புறப்படும்முன் அநாகரிகமாக நடந்துகொண்டார். பெண் உறுப்பினர்கள் அமர்ந்துள்ள நாடாளுமன்றத்திற்குப் பறக்கும் முத்தம் கொடுக்க ஒரு பெண் விரோதப் போக்குகொண்ட ஆணால் மட்டுமே முடியும். இதுபோன்ற கண்ணியமற்ற நடத்தை, இந்த நாடாளுமன்றத்தில் இதற்குமுன் ஒருபோதும் நடந்ததே இல்லை" என்றார்.

அதாவது, மக்களவையில் ஸ்மிருதி இரானி பேசிக் கொண்டிருந்தபோது ராகுல் காந்தி அவையில் இருந்து வெளியேறினார். அப்போது பாஜக பெண் எம்.பிக்களைப் பார்த்து பறக்கும் முத்தம் கொடுத்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

smriti irani

மக்களவையில் நடந்தது என்ன?

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான தனது உரையை முடித்துக்கொண்டு மக்களவையில் இருந்து ராகுல் காந்தி வெளியேறியபோது, சில கோப்புகள் கீழே விழுந்ததாகவும், அவற்றை எடுப்பதற்காக குனிந்தபோது, சில பாஜக எம்பிக்கள் அவரைப் பார்த்து சிரித்ததகாவும் கூறப்படுகிறது. அப்போது, அவர் அந்த எம்.பிக்களைப் பார்த்து ப்ளையிங் கிஸ் கொடுத்ததாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். குறிப்பாக, ராகுல் காந்திக்குப் பிறகு பேசத் தொடங்கிய ஸ்மிருதி இரானியைப் பார்த்துத்தான் அவர் இதுபோன்ற செயலைச் செய்ததாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சபாநாயகரின் பெண் பாஜக எம்.பிக்கள் புகார்

இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே உள்ளிட்ட பாஜக பெண் எம்.பிக்கள் 21 பேர் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் புகார் அளித்துள்ளனர். 21 பேரும் கையெழுத்திட்ட புகார் கடிதத்தை சபாநாயகரின் அலுவலகத்தில் ஷோபா கரந்த்லாஜே சமர்ப்பித்தார். அந்தக் கடிதத்தில், நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி தங்களைப் பார்த்து பறக்கும் முத்தம் கொடுத்ததாகக் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும், அவைக்குள் மோசமான நடத்தையை வெளிப்படுத்திய ராகுல்காந்தி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகர் ஓம் பிர்லாவை அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க புகார்

இந்தச் சம்பவம் குறித்து மத்திய அமைச்சர் சோபா கரந்தலாஜே, "அவையில் ஓர் உறுப்பினர் இவ்வாறு நடந்துகொண்டது இதுதான் முதல்முறை. பெண் எம்.பிக்களைப் பார்த்து அவர் ஃபிளையிங் கிஸ் கொடுத்தார். இது ஏற்கத்தக்கதல்ல. எனவே, அவர்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளோம்" என்று கூறினார்.

இதுகுறித்து மற்றொரு அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ், "அவையை விட்டு வெளியே செல்லும்போது அவர் (ராகுல் காந்தி) ஃபிளையிங் கிஸ் கொடுத்ததை நாங்கள் விரும்பவில்லை. இது நமது கலாசாரம் அல்ல. நாடாளுமன்றத்தில் இதுபோன்று நடப்பதை சகித்துக்கொள்ள முடியாது" என்று குறிப்பிட்டார்.

பாஜக எம்பி ரவிசங்கர் பிரசாத், ”அவர் பறக்கும் முத்தம் கொடுக்கிறார். ராகுல் காந்திக்கு என்ன ஆயிற்று? இத்தனை பெண்கள் சபையில் அமர்ந்திருக்கிறார்கள். அவருக்கு எந்த நாகரிகமும் இல்லை. மிகவும் வேதனையாக இருக்கிறது" எனப் பதிவிட்டுள்ளார்.

ராகுல் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு காங்கிரஸின் பதில் என்ன?

”ராகுலுக்கும் ஸ்மிருதி இரானிக்கும் ஏற்கெனவே மோதல் இருந்து வருகிறது. ஏனெனில், அமேதி தொகுதியில் ராகுலை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஸ்மிருதி இரானி. அப்போது முதலே அவர்கள் இருவருக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. ராகுலுக்கு எதிராக ஸ்மிருதி தொடர்ந்து கண்டனங்களைப் பதிவு செய்வதும், அதுபோல் ஸ்மிருதிக்கு எதிராக காங்கிரஸும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகிறது. இத்தகைய சூழலில்தான் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

அதேநேரத்தில், மக்களவையில் பேசிய ராகுலின் முழு வீடியோ கட் செய்யப்பட்டிருக்கிறது. ராகுல் காந்தி 15 நிமிடம் 42 விநாடிகள் பேசிய நிலையில், 11 நிமிடம் 8 விநாடிகள் மட்டுமே ஒளிபரப்பப்பட்டது. அதிலும் 11 நிமிடங்கள் 8 விநாடிகள் சபாநாயகரை மட்டுமே காட்டியது. அவதூறு வழக்கில் எம்.பி. பதவியை இழந்த அவர், தற்போது உச்ச நீதிமன்ற உத்தரவு தடைக்குப் பிறகு அவரின் தகுதி இழப்பை மக்களவைச் செயலகம் ரத்து செய்தது. இதனால் மீண்டும் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்திருக்கும் ராகுலின் பேச்சைக் கண்டு பாஜக பயப்படுகிறது. இந்தச் சூழலில் அவரை வேறு வகையில் சிக்க வைப்பதற்காகவே இதுபோன்ற வேலைகளை பாஜக செய்துவருகிறது” எனக் காங்கிரஸ் கட்சியினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் எம்பி மாணிக்கம்தாகூர், "ராகுல் போபியாவில் இருந்து ஸ்மிருதி இரானி வெளிவரவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், “இந்திய ஒற்றுமை யாத்திரை முழுவதும் சகமனிதர்களுக்கு, அன்பையும் பாசத்தையும் காட்டியவர் ராகுல். அவரைத் தவறாகப் பேசுவது அவர்களின் பிரச்னை, ராகுலின் பிரச்னை அல்ல” எனக் கூறியுள்ளார்.

ராகுலின் செயலை தாம் பார்த்ததாகக் கூறியுள்ள சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு எம்பி பிரியங்கா சதுர்வேதி, “ராகுல் காந்தி, அன்பை வெளிப்படுத்தியதை பாஜக தவறாகப் புரிந்துகொண்டிருப்பதாகவும், பாரதிய ஜனதாவினரால் அன்பை ஏற்க முடியவில்லை” என விமர்சித்துள்ளார்.