இந்தியா

உ.பி.யில் பாஜக பின்னடைவை சந்திக்கும்- ஆய்வில் கணிப்பு

உ.பி.யில் பாஜக பின்னடைவை சந்திக்கும்- ஆய்வில் கணிப்பு

Rasus

உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கூட்டணியே அதிகளவிலான மக்களவை தொகுதிகளை வெல்லும் என்றும் பாஜக பின்னடைவை சந்திக்கும் எனவும் சர்வே ஒன்றில் கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியா டுடே நடத்திய சர்வேயில், உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், ராஷ்ட்ரிய லோக் தள் ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணி 80 தொகுதிகளில் 58 தொகுதிகளை கைப்பற்றும் என கணித்துள்ளது. அதே வேளையில் பாஜக-அப்னா தள் கூட்டணி 18 இடங்களையும் , காங்கிரஸ் 4 இடங்களையும் வெல்ல வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014 மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ், ராஷ்ட்ரிய லோக் தள், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணியாக தேர்தலை சந்தித்த நிலையில் வெறும் 5 இடங்களையே வென்றன. ஆனால் பாஜக கூட்டணி 73 இடங்களை கைப்பற்றியது.

ஒருவேளை கடந்த தேர்தலை போலவே சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் காங்கிரஸை கூட்டணியுடன் இணைத்துக் கொண்டால் 75 இடங்கள் வரை வெல்ல முடியும், அப்போது பாஜக கூட்டணி 5 இடங்களில் தான் வெல்லும் என்றும் இந்த சர்வேவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி முதல் இந்த ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதி வரை 20 நாடாளுமன்ற தொகுதிகளில் 2 ஆயிரத்து 478 பேரிடம் நடத்திய ஆய்வில் இந்த கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.