இந்தியா

சிஏஏ அலை ஓய்வதற்குள் பொது சிவில் சட்டத்தை கையில் எடுக்கிறதா பாஜக?

சிஏஏ அலை ஓய்வதற்குள் பொது சிவில் சட்டத்தை கையில் எடுக்கிறதா பாஜக?

webteam

2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. அதன்படி முதலாவதாக ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்தது. இதற்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களில் இன்னமும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இது ஒருபுறம் இருக்க பல ஆண்டுகளாக நீடித்து வந்த ராம ஜென்ம பூமி வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். அதனால் பாஜக அளித்த வாக்குறுதிகளில் ஒன்றான ராமர் கோயில் கட்டும் பணி விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பாஜக அளித்த வாக்குறுதிகளில் முக்கியமாக எஞ்சியிருப்பது பொதுசிவில் சட்டம். இந்த சட்டத்தை அமல்படுத்துவதே பாஜகவின் அடுத்த குறிக்கோளாக இருக்கும் என கூறப்படுகிறது. பிரதமராக நேரு நியமிக்கப்பட்டபோதே இந்த சட்டம் விவாதத்துக்கு உள்ளானது. 1949-ல் நேருவின் அமைச்சரவை இருந்தபோது பொது சிவில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 44-வது ஷரத்து பரிந்துரை செய்தது.

அப்போது சட்டத்துறை அமைச்சராக இருந்த அம்பேத்கரும் இந்தச் சட்டத்தைக் கொண்டு வருவதில் ஆர்வம் காட்டியதாக கூறப்படுகிறது. பொது சிவில் சட்டத்தின்படி ஒரு குறிப்பிட்ட நாட்டில் வாழும் எந்த ஒரு மத, இன, சமய பண்பாட்டைத் தழுவிய தனி நபருக்கும் பொதுவான உரிமை மற்றும் தண்டனை முறை விதிக்கப்படும். இச்சட்டம் சிறுபான்மையினரை, அதிகளவில் பாதிக்கும் என ஒரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மறுபுறம் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான சட்டம் என்று மற்றொரு தரப்பு தெரிவிக்கிறது.

இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல் பரவுகிறது. ஏனென்றால் முக்கிய அலுவல்கள் இருப்பதால் மாநிலங்களவையில் பாஜக எம்.பிக்கள் தவறாமல் இன்று பங்கேற்க வேண்டும் என்றும், அரசின் நடவடிக்கைக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்றும் பாஜக மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அக்கட்சியின் கொறடா உத்தரவிட்டுள்ளது. இதனால் மாநிலங்களவையில் இன்று பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்படலாம் என தகவல் பரவி வருகிறது. 

ஆனால் திருத்தப்பட்ட அல்லது புது மசோதாவை தாக்கல் செய்ய வேண்டுமென்றால் 48 மணிநேரத்திற்கு முன்பாகவே சபைக்கு அனுப்ப வேண்டும். அதன்படி பார்த்தால் பொது சிவில் சட்ட மசோதா இன்று தாக்கலாக வாய்ப்பில்லை எனத் தெரியவந்துள்ளது.