ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர ஃபட்னாவிஸ் பிடிஐ
இந்தியா

மகாராஷ்டிரா | 28 ஆண்டுகால ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி.. மும்பையை முழுதாய்க் கைப்பற்றிய பாஜக!

மகாராஷ்டிர மாநகராட்சித் தேர்தலில், பாஜக மாநிலம் தழுவிய அளவில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அது, 1,267 இடங்களில் வெற்றி பெறும் அளவுக்கு முன்னிலையில் உள்ளது.

Prakash J

மகாராஷ்டிர மாநகராட்சித் தேர்தலில், பாஜக மாநிலம் தழுவிய அளவில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அது, 1,267 இடங்களில் வெற்றி பெறும் அளவுக்கு முன்னிலையில் உள்ளது.

மகாராஷ்டிராவில் சுமார் 9 ஆண்டுகளுக்குப் பிறகு 29 மாநகராட்சிகளில் உள்ள 2,869 இடங்களுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், ஷரத் மற்றும் அஜித் பவார், தாக்கரே சகோதரர்கள், காங்கிரஸ் எனப் பலமுனை போட்டி நிலவியது. ஆனால், அனைத்தையும் வீழ்த்தி பாஜக - சிவசேனா அமோக வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, பாஜக மாநிலம் தழுவிய அளவில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அது, 1,267 இடங்களில் வெற்றி பெறும் அளவுக்கு முன்னிலையில் உள்ளது. அடுத்து பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும் 330 இடங்களைப் பெற்று, மகாயுதியின் ஒட்டுமொத்த ஆதிக்கத்தை வலுப்படுத்தியுள்ளது. ஆனால், மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்தத் தேர்தலுக்காக மீண்டும் இணைந்த தாக்கரே சகோதரர்களும் பவார்ஸ் உறவினர்களும் கோட்டை விட்டுள்ளனர். மாநகராட்சிகளைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக இணைந்த அவர்களின் கனவு, இந்த தேர்தலில் பெருத்த ஏமாற்றத்தையே தந்துள்ளது. அதேபோல் காங்கிரஸும் அடிவாங்கியுள்ளது.

ராஜ் தாக்கரே, உத்தவ் தாக்கரே

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (UBT) 153 இடங்களைப் பெற்றது, அதே நேரத்தில் NCPஇன் அஜித் பவார் பிரிவு 151 இடங்களைப் பிடித்தது. சரத் பவார் தலைமையிலான NCP (SP) 31 இடங்களை வென்றது. காங்கிரஸ் 303 இடங்களைப் பிடித்தது. MNS, VBA மற்றும் பிற கட்சிகள் உட்பட சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் இணைந்து 300க்கும் மேற்பட்ட இடங்களைப் பிடித்தன.

அதிலும் ஆசியாவின் பணக்கார மாநகராட்சியான பிரஹன்மும்பை மாநகராட்சியை பாஜக - சிவசேனா கூட்டணி கைப்பற்றியுள்ளது. 227 உறுப்பினர்களைக் கொண்ட பிருஹன் மும்பை மாநகராட்சியில் (பிஎம்சி) பாஜக-சிவசேனா (ஷிண்டே) கூட்டணி பெரும்பான்மையைக் கடந்து, தாக்கரே குடும்பத்தின் பல தசாப்த கால (28 ஆண்டுகால) பிடியை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், 227 வார்டுகளில் 88 இடங்களை பாஜக கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் 2017ஆம் ஆண்டில் பாஜக அதன் முந்தைய அதிகபட்சமான 82 இடங்களை முறியடித்துள்ளது. இதன் விளைவாக, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மும்பைக்கு பாஜக-சிவசேனா (ஷிண்டே பிரிவு) மேயர் பதவி கிடைக்க உள்ளது. அதேநேரத்தில், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா இங்கு, 72 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இது 2017இல் பிரிக்கப்படாத கட்சி பெற்ற 84 இடங்களைவிட குறிப்பிடத்தக்க சரிவு ஆகும்.

bmc

அதேபோல், பவார் குடும்பத்தின் கோட்டையாக நீண்டகாலமாகக் கருதப்பட்ட புனேவையும் பாஜக தட்டிப் பறித்தது. அஜித் பவார் தலைமையிலான NCP மற்றும் ஷரத் பவார் பிரிவு இரண்டையும் ஓரங்கட்டி பாஜக முன்னிலை பெற்றது. இந்த முடிவு அஜித் பவாருக்கு ஒரு குறிப்பிடத்தக்க பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இதுதவிர, நாக்பூரிலும் பாஜக-சிவசேனா கூட்டணி 151 இடங்களில் 103 இடங்களைப் பெற்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது. அதன் பாரம்பரிய கோட்டையைத் மீண்டும் தக்க வைத்துக் கொண்டது. அதேபோல் நாசிக்கிலும் பாஜக 71 இடங்களைப் பெற்று முன்னிலையில் உள்ளது. தானேவிலும் இதே கூட்டணியே முன்னிலையில் உள்ளது. ஷிண்டே தலைமையிலான சிவசேனா 39 இடங்களுடன், பாஜக 24 இடங்களுடன் முன்னிலையில் உள்ளன. இதே கூட்டணி, நவி மும்பையையும் விட்டுவைக்கவில்லை. 111 இடங்களில் 72 இடங்களை பாஜக கைப்பற்றியுள்ளது. வசாய்-விரார் மற்றும் மாலேகான் தொகுதிகளில் மட்டும் சுயேச்சைகள் மற்றும் சிறிய கட்சிகள் வலுவான வெற்றியைப் பதிவு செய்துள்ளன.