கர்நாடகாவில் அன்று பாஜக முதலமைச்சர் எடியூரப்பா ராஜினாமா செய்ததுபோல இன்று தேவேந்திர ஃபட்னாவிஸ் ராஜினாமா செய்துள்ளார்.
2018ஆம் கர்நாடக சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சியான பாஜகவை ஆட்சி அமைக்க ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தார். அதன்படி, பெரும்பான்மை இல்லையென்றாலும், மே 17ஆம் தேதி எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றார். இந்த பதவியேற்பை காங்கிரஸும், மஜதவும் கடுமையாக எதிர்த்தன. பாஜகவின் அவசர முடிவால் காங்கிரஸ் சட்டென மஜத தலைமையில் ஆட்சி அமைக்க சம்மதம் தெரிவித்தது. அதேசமயம் முதலமைச்சராக பதவியேற்ற எடியூரப்பாவிற்கு 15 நாட்கள் அவகாசத்தை ஆளுநர் கொடுத்தார்.
இந்த 15 நாட்களில் குதிரைப் பேரம் நடக்கலாம் என குற்றஞ்சாட்டிய காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்குகள் அவசரமாக விசாரிக்கப்பட்டன. இதையடுத்து உச்சநீதிமன்றம் 19ஆம் தேதியே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்தது. இது பாஜகவிற்கு சவாலாக அமைந்தது. உச்ச நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில் மே 19 காலை 11 மணிக்கு சட்டமன்றம் கூடியது. எம்.எல்.ஏக்கள் அனைவரும் பதவியேற்றனர்.
அன்று பிற்பகல் சட்டமன்றத்தில் பேசத்தொடங்கிய முதலமைச்சர் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். கர்நாடகா ஆளுனர் வாஜூபாய் வாலா வழங்கிய 15 நாள் அவகாசத்தை ரத்து செய்து, உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவே பாஜகவை அந்த நிலைக்கு தள்ளியதாக கூறப்பட்டது. இதன்மூலம் 52 மணி நேரத்திற்கு மட்டுமே முதலமைச்சராக எடியூரப்பா இருந்தார்.
ஆனால் கர்நாடகாவில் எப்படி பாஜக பெரும்பான்மை இல்லாமல் ஆட்சியமைத்து அது கலைந்துபோனதோ அதே போன்று, தற்போது மகாராஷ்டிராவிலும் நடந்துள்ளது. அங்கு 52 மணி நேரம் எடியூரப்பா முதலமைச்சர், இங்கு 78 மணி நேரம் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதலமைச்சர். இது தான் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம். மற்றவை அனைத்தும் பெரும்பாலும் ஒன்றுதான்.
பெரும்பான்மை இல்லாவிட்டாலும், தேசியவாத காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருந்த அஜித் பவார் ஆதரவுடன் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆட்சியமைத்தார். முதலமைச்சராக ஃபட்னாவிஸும், துணை முதலமைச்சராக அஜித் பவாரும் நவம்பர் 23ம் தேதி பதவியேற்றனர். இதையடுத்து கர்நாடகாவில் மஜத மற்றும் காங்கிரஸ் போல, இங்கு சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் ஆகியோர் உச்சநீதிமன்றம் சென்றனர். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆளுநர் கொடுத்த இரண்டு வார அவகாசத்தை ரத்து செய்து, நாளை மாலை 5 மணிக்குள்ளேயே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நீருபிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், அஜித் பவார் தனது துணை முதலமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்தார். நிலைமையை புரிந்துகொண்ட தேவேந்திர ஃபட்னாவிஸ் சட்டமன்றம் வரை சென்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதை தவிர்த்து, இன்றே தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இதைத்தொடர்ந்து கர்நாடகாவில் மஜதவுடன் இணைந்து காங்கிரஸ் ஆட்சி அமைத்தது போல், மகாராஷ்டிராவிலும் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியாக சிவசேனா - என்சிபி - காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க உள்ளன. அதேசமயம் மஜத-காங்கிரஸ் கூட்டணி கர்நாடகாவில் ஆட்சி அமைத்து, அந்த ஆட்சி கலைந்து தற்போது மீண்டும் பாஜக ஆட்சி நடைபெறுவது தனிக்கதை என்பது குறிப்பிடத்தக்கது.