அம்பேத்கர் விவகாரத்தில் இந்தியா கூட்டணி மற்றும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனித்தனியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற வளாகத்தில் I.N.D.I.A. கூட்டணி எம்.பி.க்கள் கூடியிருந்த நிலையில் அங்கு வந்த பாஜக எம்.பி. க்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பாஜக எம்.பி. பிரதாப் சந்திர சாரங்கி கீழே விழுந்ததில் காயம் அடைந்தார்.
ராகுல்காந்தி ஒருவரை தள்ளிவிட்டதாகவும், அவர் தன்மீது விழுந்ததில் தனக்கு காயம் ஏற்பட்டதாகவும் பாஜக எம்.பி. சாரங்கி புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் காரணமாக நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
இதனிடையே நாகாலாந்தைச் சேர்ந்த மாநிலங்களவை பெண் எம்பி ஃபாங்னான் கொன்யாக், நாடாளுமன்ற நுழைவு வாயிலின் அருகே தான் நின்று கொண்டிருந்த போது, காங்கிரஸ்காரர்கள் தன்னை நோக்கி கத்த ஆரம்பித்ததாக குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கருக்கு அவர் எழுதிய கடிதத்தில், “எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியால் எனது சுயமரியாதை மிகவும் புண்பட்டுள்ளது. அவரது நடத்தை, அவரது தொனி, நெருங்கி வந்தது போன்றவற்றால் நான் மிகவும் அசௌகரியமாக உணர்ந்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.
ராகுல்காந்தியின் இன்றைய செயல் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் நாடாளுமன்ற நெறிமுறைகளை மீறுவதாக கொன்யாக் தெரிவித்துள்ளார். மேலும், “நான் நாகாலாந்தின் எஸ்டி சமூகத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினர். எனது கண்ணியமும் சுயமரியாதையும் ராகுல்காந்தியால் ஆழமாக பாதிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் இப்படி நடந்துகொள்ள கூடாது என்பதுபோல உணர்கிறேன்.” என தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த கொன்யாக், “எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி என் அருகாமையில் வந்தார். அது எனக்குப் பிடிக்கவில்லை. அதுமட்டுமின்றி அவர் கத்த ஆரம்பித்தார். இன்று நடந்ததற்கு வருந்துகிறேன். இனி இதுபோல் நடக்கக்கூடாது. அவர்கள் மிரட்டியது எங்களுக்குப் பிடிக்கவில்லை. இதுதொடர்பாக மாநிலங்களவைத் தலைவரிடமும் புகார் அளித்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
ஃபாங்னான் கொன்யாக் வடகிழக்கு பிராந்தியத்தின் மேம்பாட்டு அமைச்சகத்திற்கான ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.