சபரிமலையைத் தொடர்ந்து குருவாயூர் கோயிலிலும் முறைகேடு நடந்திருப்பது தொடர்பாக, விசாரணை நடத்தக் கோரி பாஜக தலைவர் கடிதம் எழுதியுள்ளார்.
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவில் கருவறையின் வாயிலில், இருபுறமும் உள்ள துவாரபாலகர்கள் சிலைகளில் அணிவிக்கப்பட்டு இருந்த தங்க கவசங்கள், 2019இல் கழற்றப்பட்டு, செப்பனிடுவதற்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதற்காக, திருவிதாங்கூர் தேவசம் போர்டு கவசங்களை ஒப்படைத்தபோது, அதன் எடை 42.8 கிலோவாக இருந்தது. அதை செப்பனிட்டபின், சென்னை நிறுவனம் மீண்டும் ஒப்படைத்தபோது, அதன் எடை 38 கிலோவாக குறைந்திருந்தது. அதாவது தங்கமுலாம் பூசப்பட்ட கவசத்தில் இருந்து 4.54 கிலோ அளவுக்கு தங்கம் மாயமாகி இருந்தது. இந்த விவகாரம், பக்தர்கள் மற்றும் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தங்கத்தின் எடை குறைந்ததில் உள்ள முறைகேடுகள் குறித்து முழுமையாக விசாரிக்க, நீதிபதிகள் ராஜா விஜயராகவன்.வி மற்றும் கே.வி.ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு தற்போது சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, 2019இல் சபரிமலை கோயிலின் துவாரபாலகர் சிலைகள் மீதான தங்கமுலாம் பூசப்பட்ட தகடுகளை தாமிரத் தகடுகளாக தவறாகப் பதிவு செய்ததாக, அப்போதைய நிர்வாக அதிகாரி பி.முராரி பாபுவை திருவிதாங்கூர் தேவசம் போர்டு இடைநீக்கம் செய்துள்ளது. மேலும், உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் இடைத்தரகராகச் செயல்பட்ட உன்னிகிருஷ்ணன் போத்தி மற்றும் தேவசம்போர்டு துணை ஆணையர் முராரி பாபு, திருவிதாங்கூர் தேவசம் வாரிய செயலர் ஜெயஸ்ரீ, செயல் அதிகாரி சதீஷ், நிர்வாக அதிகாரி ஸ்ரீகுமார், முன்னாள் திருவாபரணம் ஆணையர் கே.எஸ்.பைஜு உள்ளிட்ட 9 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவசம் போர்டு அதிகாரிகளே இந்த கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டு இருப்பது அம்பலமாகியது விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கத் தகடுகள் மாயமான வழக்கில், நன்கொடையாளர் உன்னிகிருஷ்ணன் போத்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், குருவாயூர் ஐயப்பன் கோயிலிலும் பலதவறுகள் நடந்திருப்பதாக தணிக்கைத்துறை அறிக்கையில் தெரியவந்துள்ளது. காணிக்கையாக வந்த தங்கம், வெள்ளி நகைகள், யானைத் தந்தங்கள்,குங்குமப்பூ உள்ளிட்ட பொருட்கள் கருவூலத்திலிருந்து மாயமாகியுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதாக தணிக்கைத் துறை அறிக்கை கூறுகிறது. கோயிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட மதிப்புமிக்க பொருட்கள் கணக்கில் வராமல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அந்த அறிக்கையில், 2002ஆம் ஆண்டு பாலக்காட்டைச் சேர்ந்த ஒருவர் நன்கொடையாக வழங்கிய ரூ.15 லட்சம் மதிப்புள்ள 2,000 கிலோ எடையுள்ள பாத்திரம் ஒன்று எந்தப் பதிவுகளிலும் இல்லை என தெரிய வந்துள்ளது. பக்தர்களால் சாக்கு மூட்டைகள் வாயிலாக வழங்கப்பட்ட மஞ்சாடி விதைகள் மற்றும் குங்குமப்பூக்கள் உள்ளிட்ட பிற பக்தி காணிக்கைகளும் கணக்குகளில் இருந்து விடுபட்டுள்ளன. இந்தக் குறைபாடுகள், வாரியத்தின் பதிவுப் பராமரிப்பு நடைமுறைகளில் பரவலான நடைமுறைத் தவறுகளைக் குறிக்கின்றன. மேலும், கோயில் சொத்துகள் கடந்த 40 ஆண்டுகளாகவே கணக்கெடுக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த தவறுகளைத் தொடர்ந்து, சபரிமலை ஸ்ரீதர்ம சாஸ்தா கோயில் உட்பட கேரள கோயில்களில் ஊழல், முறைகேடு மற்றும் மீறல்கள் தொடர்பான விஷயங்களில் தலையிடக் கோரி பாஜக மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும், அனைத்து தேவசம் போர்டுகளையும் இந்திய தலைமை கணக்காளர், முழுமையாக தணிக்கை செய்ய உத்தரவிட வேண்டும் என்றும், அதன் முடிவுகள் பொதுவெளியில் வெளியிடப்பட வேண்டும் என்றும் அவர் உள்துறை அமைச்சரை வலியுறுத்தியுள்ளார்.
இருப்பினும், தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து கூற்றுகளையும் எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில் விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்வம் அதிகாரிகள் தெரிவித்தனர். தணிக்கை முடிவுகளின் அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நீதிமன்றம் இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரித்ததாகவும், ஆனால் கடந்த இரண்டரை ஆண்டுகளில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள காணாமல் போன அனைத்து தந்தங்களும் வெட்டப்படும் போதெல்லாம் விதிகளின்படி, நேரடியாக வனத்துறையிடம் ஒப்படைக்கப்படுகின்றன என்றும், அதனால்தான் அது கோயிலின் இருப்பு பதிவேட்டில் இடம்பெறவில்லை என்றும் அவர்கள் தெரிவித்திருப்பதாக இந்தியா டுடே வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.