இந்தியா

“பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட 30கோடி பேரம்” - காங். எம்.எல்.ஏ புகார்

webteam

ஆப்ரேசன் லோட்டஸ் -ல் பங்கேற்று பாஜகவுக்கு ஆதரவாக செயல்படக்கூறி தனக்கு ரூ.30 கோடி தொகையும், அமைச்சர் பதவியும் தருவதாக பாஜகவிடம் இருந்து அழைப்பு வந்திருப்பதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், கர்நாடக மாநில மகிளா காங்கிரஸ் தலைவியுமான லக்‌ஷ்மி ஹப்பால்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து பேசியுள்ள லக்‌ஷ்மி ஹப்பால்கர் ''பாஜகவின் பெண் தலைவர் ஒருவரிடம் இருந்து எனக்கு தொலைபேசி வாயிலாக பேரம் பேசப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் உண்மையான தொண்டன் நான். எந்தப் பேரத்தையும் நான் ஏற்கமாட்டேன் எனக்கூறி பிடிவாதமாக மறுத்துவிட்டேன்'' என்று தெரிவித்தார்.

மேலும் ''என்னை பேரத்திற்கு இணங்க செய்வதற்காக கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஒருவர் எனது குடும்ப உறுப்பினர்களுடன் பேசியுள்ளார்'' என்றும் அவர் தெரிவித்தார்.

பாஜக தலைவர்கள் மீது குற்றஞ்சாட்டினாலும் குறிப்பிட்ட எந்த ஒரு பெயரையும் லக்‌ஷ்மி ஹப்பால்கர் குறிப்பிடவில்லை. பேரம் தொடர்பான குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள கர்நாடக மாநில பாஜக கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் பிரபாகர் கோர், ''குற்றச்சாட்டு உண்மை என்றால் பேரம் பேசியவர்களின் பெயர்களை லக்‌ஷ்மி ஹப்பால்கர் வெளியிட வேண்டும்'' என்று சவால் விடுத்துள்ளார். பேரம் தொடர்பான குற்றச்சாட்டு குறித்து கர்நாடக மாநில காங்கிரஸ் தலைமைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக லக்‌ஷ்மி ஹப்பால்கர் தெரிவித்துள்ளார்.