பீகாரின் வெற்றிக்குப் பிறகு பாஜக, அடுத்து வரும் மாநில சட்டசபைத் தேர்தல்கள் பற்றிச் சிந்திக்கத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் இணைந்து பெரும்பான்மை பெற்றுள்ளன. குறிப்பாக, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளையும் தாண்டி பல தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இன்னும் சொல்லப்போனால், பாஜக கூட்டணியே நம்பமுடியாத, எதிர்பாராத மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இதையடுத்து, அது ஆட்சியமைக்கும் வேலைகளில் களமிறங்கியுள்ளது. இதற்கிடையே அடுத்து வரும் மாநில சட்டசபைத் தேர்தல்கள் பற்றிய பேச்சுகள் எழுந்துள்ளன.
அந்த வகையில், அடுத்த வருடம் 5 சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதில் அசாம், மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களும், புதுச்சேரியும் அடக்கம். இந்தத் தேர்தலுக்கான வேலையில் அந்தந்த மாநில கட்சிகள் இப்போது முதலே தீவிரம் காட்டி வருகின்றன. மறுபுறம், பீகாரில் வென்றதைப்போல் இந்த மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கவும் தக்க வைக்கவும் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அதிலும், தென் மாநிலங்களில் வாக்குச் சதவீதத்தை அதிகரிக்கவும் குறிப்பிட்ட தொகுதிகளைப் பிடிக்கவும் தீவிரமாய்ச் செயல்பட்டு வருகிறது.
குறிப்பாக, கேரளாவில் மக்களவைத் தேர்தலில் முதல்முறையாகக் கொடி நாட்டியுள்ள பாஜக, அதை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் உள்ளது. அதேநேரத்தில், 2021இல் 99 இடங்களை வென்ற இடது ஜனநாயக முன்னணி (LDF), கேரளா இதுவரை கண்டிராத ஒரு வரலாற்று சிறப்புமிக்க தொடர்ச்சியான மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க முயற்சிக்கிறது. 2021இல் 41 இடங்களுடன் பலவீனமடைந்த ஐக்கிய ஜனநாயக முன்னணியும் (UDF) தேர்தலில் வெற்றிபெறத் துடிக்கிறது. இதற்கிடையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அதன் வளர்ந்து வரும் இருப்பைப் பயன்படுத்தி தன்னை ஒரு தீர்க்கமான மூன்றாவது சக்தியாக நிலைநிறுத்திக் கொள்ள தயாராகி வருகிறது. ஏற்கெனவே தற்போதைய கேரள அரசு, ஒருசில ஊழல்களால் கறைபட்டுக் கொண்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படுகிறது. அது, 2026 தேர்தலில் எதிரொலிக்கும் எனத் தெரிகிறது.
மேலும், பீகார் வெற்றி பாஜகவின் கேரளா பார்வையை மாற்றியுள்ளது. முக்கியமாக சிறுபான்மை மக்கள் விஷயத்தில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் சிறுபான்மை மக்கள் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர். கேரளா சிறுபான்மை மக்களுக்கு பாஜக மீது தவறான பிம்பம் உள்ளது. அது தற்போது மாறுவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், தமிழ்நாடும் பாஜகவின் குறியாக உள்ளது.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்தது. அப்போது பாஜகவுக்கு 20 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில் 4 பேர் வெற்றி பெற்றனர். ஆனால், தற்போது நாடு முழுவதும் முன்னேறி வரும் பாஜக, இந்த முறை அதிமுகவைக் கூடுதலாகப் பயன்படுத்திக் கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, பீகாரில் பாஜக வெற்றிபெற்றதற்குக் காரணம், தொகுதிப் பங்கீட்டில் சரியான எண்ணிக்கையைப் பெற்றதுதான். அது, பாஜகவுக்கு நன்றாகவே கை கொடுத்திருக்கிறது. அந்த வகையில், இந்த தேர்தலிலும் பாஜக நிச்சயம் 50-60 தொகுதிகளை எதிர்பார்க்கும். அதைவைத்தே தமிழகத்தில் தன்னுடைய வாக்குச் சதவிகிதத்தையும், தொகுதி எண்ணிக்கையையும் உயர்த்த நினைப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், இதன்மூலம் தன் கட்சியின் பலத்தையும் அதிகரித்துக் கொள்ள நினைக்கிறது.
இதேபோல், புதுச்சேரியையும் அது கவனத்தில் கொள்கிறது. மறுபுறம், அசாமில் அக்கட்சியே ஆட்சியில் இருப்பதால், அதை மீண்டும் தக்கவைக்க போராடும். ஆனால், மேற்கு வங்கத்தில் இந்த முறை எப்படியாவது ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் இருக்கிறது, பாஜக. அதற்கான வழிகளையும் சமீபகாலமாகவே தேடி வருகிறது. திரிணாமுல் காங்கிரஸின் கோட்டையாக இருக்கும் மேற்கு வங்கத்தில், பாஜகவே வாக்குச் சதவிகிதத்தில் 2வது இடத்தில் உள்ளது. ஆகையால் அதை மேலும் கைப்பற்ற பாஜக கடுமையாக உழைக்கும்.
அதற்கு உதாரணமாய், சமீபகாலமாக குடியேற்ற விவகாரங்கள் கோலோச்சி வருகின்றன. மேலும், பீகாரில் பிரதமரின் சூறாவளி பிரசாரத்தின்போது கடந்தகால காட்டாட்சி அதிகாரமும் துப்பாக்கி விவகாரமும் பெரிதாய் எடுத்துரைக்கப்பட்டது. அது, தற்போது நன்றாகவே பலனளித்துள்ளது. அதேபோல், மேற்கு வங்கத்திலும் ஊழல், பாலியல் வன்புணர்வு பற்றிய பிரச்னைகள் நாள்தோறும் வெடித்து வருகின்றன. அதை, பாஜக பெரிதாக எடுத்துக் கொள்ளும் எனக் கூறப்படுகிறது. அது தவிர, வெற்றிபெறுவதற்கான பல வழிகளையும் அது தேடும் எனச் சொல்லப்படுகிறது. மொத்தத்தில், தென் மாநிலங்களைவிட, பாஜகவுக்கு தற்போது மேற்கு வங்கமே அடுத்த குறியாக இருக்கிறது.