John Brittas vs Sushmita Dev ‘lungiwala’  ANI
இந்தியா

நாடாளுமன்றத்தில் வெடித்த 'லுங்கி வாலா' சர்ச்சை.. தென்னிந்தியர்களை அவமதித்தாரா பாஜக MP?

நாடாளுமன்றத்தில் தென்னிந்தியர்களை அவமானப்படுத்தும் வகையில் பாஜக எம்.பி பேசியதாக எழுந்துள்ள சர்ச்சை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Praveen Joshva L

வடஇந்தியர்கள் தென்னிந்தியர்களை அவமதிக்கும் வகையில் பேசுவதாக நீண்டகாலமாகவே குற்றச்சாட்டு முன்வைக்கபபடுகிறது. எனினும், தற்போது தென்மாநிலங்கள் வடமாநிலங்களைவிட வளர்ச்சி பெற்றுவரும் நிலையில், இந்தக் குற்றச்சாட்டு கொஞ்சம்கொஞ்சமாக குறைந்துவருகிறது.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் தென்னிந்தியர்களை அவமதிக்கும் வகையில் பாஜக எம்.பி பேசியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்றச்சாட்டை, முன்வைத்துள்ள கேரளாவைச் சேர்ந்த சிபிஎம் எம்பி ஜான் பிரிட்டாஸ், மாநிலங்களவையில் தன்னிடம் பேசிய பாஜக எம்பி சுஷ்மிதா தேவ் , "லுங்கி வாலா" என்று கூறித் தன்னையும் தென்னிந்தியப் பண்பாட்டையும் அவமதித்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். Sushmita Dev

John Brittas

மேலும், தாம் அவையில் வேட்டி அணிந்து பேசிக்கொண்டிருந்தபோது, பாஜக எம்.பி சுஷ்மிதா தேவ் என்னை 'லுங்கி வாலா' என்று கூறி இழிவுபடுத்தினார் என்றும், ஒரு மலையாளியாக, தென்னிந்தியராக இருப்பதில் நான் பெருமை கொள்கிறேன். கலாசார உடைகளைக் கேலி செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இதற்காக அவர் மீது உரிமைகள் மீறல் நோட்டீஸ் அளித்துள்ளேன் என்றும் ஜான் பிரிட்டாஸ் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக மாநிலங்களவையில் கடும் அமளி ஏற்பட்ட நிலையில், மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, நாங்கள் இதுபோன்ற கருத்துகளை ஆதரிக்கவில்லை என்றும், நாங்கள் அதை லுங்கி என்று அழைப்பதில்லை, வேட்டி அல்லது வேஷ்டி என்றே அழைக்கிறோம் எனக் கூறியதுடன், சுஷ்மிதா தேவ் தனது தரப்பு விளக்கத்தை அளிக்கவும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, அவையின் கண்ணியத்தை அனைவரும் காக்க வேண்டும் என்றும், இரு தரப்பையும் சபாநாயகர் தனது அறைக்கு அழைத்து விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். அதன் பின்னர் மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், உறுப்பினர்கள் மற்ற மாநிலங்களின் கலாசாரத்தையும், பிராந்திய அடையாளங்களையும் கௌரவிக்க வேண்டும் என்றும், சக உறுப்பினர்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் வகையில் பேசக் கூடாது என்றும் அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து சமரசப் பேச்சுவார்த்தைக்காக இருவரையும் தனது அறைக்கு அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த விவகாரத்தால் நாடாளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.