நாடாளுமன்றத்தில் தன்னை தாக்கியதாக பாரதிய ஜனதா பெண் எம்.பியான சங்கீதா சிங் தியோ, காங்கிரஸ் பெண் எம்.பி. ஜோதிமணி மீது புகார் அளித்துள்ளார்.
நாடாளுமன்ற கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில், மக்களவையில் தன்னை தாக்கியதாக பாரதிய ஜனதா எம்.பி ஜஸ்கவுர் மீனா மீது, காங்கிரஸ் எம்.பி. ரம்யா ஹரிதாஸ் புகார் தெரிவித்தார். மக்களவை சபாநாயகருக்கு அவர் எழுதிய கடிதத்தில் தான் பட்டியலினத்தவர் என்பதால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா? என்ற சந்தேகம் எழுவதாகவும் கூறியிருந்தார். புகாருக்கு பதில் அளித்த பாரதிய ஜனதா எம்.பி. ஜஸ்கவுர் மீனா தானும் பட்டியலினத்தவர் தான் என்றும், அவரது புகாரில் உண்மை இல்லை என்றும் விளக்கம் அளித்திருந்தார்.
இந்தச் சூழலில், காங்கிரஸ் பெண் எம்.பி. ஜோதிமணி தன்னை தாக்கியதாக பாரதிய ஜனதா பெண் எம்.பி. சங்கீதா சிங் தியோ புகார் அளித்துள்ளார். அதேபோல், மற்றொரு காங்கிரஸ் எம்.பி.யான ரம்யாவும் தன் மீது தாக்குதல் நடத்தியதாக அவர் புகார் அளித்துள்ளார். இரு எம்.பி.க்களும் தாக்கியதால் ஏற்பட்ட காயம் தொடர்பான மருத்துவ ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் பாரதிய ஜனதா எம்.பி சங்கீதா சிங் தியோ தெரிவித்துள்ளார்.
கடந்த இரு தினங்களாக நாடாளுமன்றத்திற்குள் பெண் எம்.பி.க்களிடையே மோதல் ஏற்பட்டிருப்பதாக வந்திருக்கும் தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.