இந்தியா

மேற்கு வங்க படுகொலை சம்பவம் - நாடாளுமன்றத்தில் கதறி அழுத பாஜக பெண் எம்.பி.

ஜா. ஜாக்சன் சிங்

மேற்கு வங்கத்தில் 8 பேர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பேசிய பாஜக எம்.பி. ரூபா கங்குலி சோகத்தில் கதறி அழுதார்.

மேற்கு வங்க மாநிலம் பிர்பம் மாவட்டத்தில் உள்ள ராம்புர்ஹாட் பகுதியில் திரிணமூல் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் அண்மையில் குண்டு வீசி கொல்லப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள போஹாத் கிராமத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் கடந்த 22-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த குடியிருப்பு பகுதியில் திடீர் வன்முறை ஏற்பட்டது. இதில் 3 பெண்கள், 2 குழந்தைகள் உட்பட 8 பேரை வீடுகளுக்குள் பூட்டி வன்முறையாளர்கள் தீ வைத்தனர்.

இதில் அவர்கள் அனைவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் மேற்கு வங்கத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திரிணமூல் காங்கிரஸை சேர்ந்தவர்களே இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதாக பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த விவகாரத்தில் இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டுள்ள சூழலில், இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பாஜக எம்.பி. ரூபா கங்குலி மாநிலங்களவையில் இன்று பேசினார். அவர் பேசுகையில், "மேற்கு வங்கத்தில் படுகொலைகள் சர்வ சாதாரணமாக மாறிவிட்டன. அரசுக்கு எதிராக பேசுபவர்கள் கொல்லப்படுகின்றனர். பெண்கள், குழந்தைகள் எனக் கூட பார்க்காமல், 8 பேர் ஈவு இரக்கம் இல்லாமல் எரித்துக் கொல்லப்பட்டிருக்கின்றனர். ரவுடிகளின் அராஜகத்துக்கு பயந்து பலர் போஹாத் கிராமத்தில் இருந்து வெளியேறி வருகின்றனர். மேற்கு வங்கம் வாழ தகுதியில்லாத மாநிலமாக மாறி வருகிறது. சட்டம் - ஒழுங்கு என்பதே அங்கு இல்லை. எனவே மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்" எனக் கூறினார். முன்னதாக, ரூபா கங்குலி இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் போதே சில இடங்களில் கதறி அழுதார்.