இந்தியா

மக்களவைக்கு தற்காலிக சபாநாயகராக விரேந்திர குமார் நியமனம்

மக்களவைக்கு தற்காலிக சபாநாயகராக விரேந்திர குமார் நியமனம்

webteam

17வது மக்களவைக்கு தற்காலிக சபாநாயகராக பாஜகவின் விரேந்திர குமார் நியமிக்கப்பட்டுள்ளார். 

17ஆவது மக்களவைக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாதம் முடிவடைந்தது. இந்தத் தேர்தலின் முடிவுகள் கடந்த மே மாதம் 23ஆம் தேதி வெளியிடப்பட்டன. அதன்படி மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக மே 30ஆம் தேதி பதவியேற்றது. இதனைத் தொடர்ந்து 17ஆவது மக்களவையின் முதல் கூட்டம் வரும் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் இந்தக் கூட்டத்திற்கான தற்காலிக சபாநாயகராக பாஜகவை சேர்ந்த விரேந்திர குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்  இம்முறை மத்திய பிரதேச மாநிலம் திக்கம்கார்க் தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்வாகியுள்ளார். இவர் 7ஆவது முறையாக மக்களவையில் எம்பியாக தேர்வாகியுள்ளார். இவர் கடந்த 1996ஆம் ஆண்டு 11ஆவது மக்களவைக்கு முதல் முறையாக தேர்வாகினார். அதன்பிறகு தொடர்ச்சியாக 12,13,14,15,16 மற்றும் 17ஆவது மக்களவைக்கு எம்பியாக தேர்வாகியுள்ளார். 

பிரதமர் மோடி தலைமையிலான கடந்த அமைச்சரவையில் விரேந்திர குமார் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ப்பு அமைச்சகத்தின் துணை அமைச்சராக இருந்தது குறிப்பிடத்தக்கது.