ஜார்க்கண்ட் மாநிலத்தில் நாளை மறுநாள் சட்டமன்ற பொதுத்தேர்தல் தொடங்கவுள்ள நிலையில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
81 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு சட்டமன்ற பொதுத்தேர்தல் 5 கட்டங்களாக நடைபெறவுள்ளது. நாளை மறுநாள் தொடங்கும் வாக்குப்பதிவு டிசம்பர் 20-ஆம் தேதி வரை தொடர்கிறது. முதற்கட்டமாக நாளை மறுநாள் 13 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக டிசம்பர் 7-ஆம் தேதி 20 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடக்கவுள்ளது.
அதைத்தொடர்ந்து டிசம்பர் 12-ஆம் தேதி 17 தொகுதிகள், டிசம்பர் 16-ஆம் தேதி 15 தொகுதிகள், இறுதியாக டிசம்பர் 20-ஆம் தேதி அன்று 16 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பின்னர் டிசம்பர் 23-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன. ஜார்க்கண்ட் மாநிலத்தில் தற்போதுள்ள அரசின் பதவிக்காலம் 2020-ஆம் ஆண்டு ஜனவரி 5-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில் சி-வோட்டர் எனும் ஆய்வு நிறுவனம் சார்பில் நடத்தப்பட்டுள்ள தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, ஜார்க்கண்டில் பாஜக 28-38 இடங்களை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி 18-28 இடங்களில் வெற்றி பெறலாம் எனவும், காங்கிரஸ் 4 முதல் 10 இடங்களை கைப்பற்றும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஜார்க்கண்ட் மாணவர்கள் ஒன்றிய கட்சிக்கு 3-9 இடங்கள் கிடைக்கலாம் எனவும், ஜார்க்கண்ட் விகாஷ் மோர்சா கட்சி கணிசமான வாக்குகளை வாங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. மற்ற கட்சிகள் 3-9 இடங்களை பிடிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சதவிகிதத்தின் அடிப்படையில், பாஜக 33.3% வாக்குகளும், ஜார்க்கண்ட் முக்தி மோர்சா 18% வாக்குகளும், காங்கிரஸ் 12.4% வாக்குகளும் பெறும் என கூறப்பட்டிருக்கிறது. அதேசமயம் தனிப்பெரும் கட்சியாக பாஜக வென்றாலும், ஆட்சி அமைக்கும் (41 இடங்கள்) அளவிற்கு பெரும்பான்மை கிடைக்காது என குறிப்பிடப்பட்டுள்ளது.