இந்தியா

மணிப்பூர் அரசியலில் புதிய திருப்பம்

webteam

மணிப்பூரில் பாஜக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்ட நிலையில், புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

மணிப்பூரில் கடந்த 3 ஆண்டுகளாக பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பாஜகவைச் சேர்ந்த பிரேன் சிங் முதல்வராக உள்ளார். மொத்தம் 60 இடங்களைக் கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவைக்கு கடந்த 2017-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பாஜக 21 இடங்களிலும், காங்கிரஸ் 28 இடங்களிலும் வெற்றி பெற்றன.

ஆனால் பிறகட்சிகளின் உதவியோடு பாஜக ஆட்சி அமைத்தது. இந்நிலையில் கடந்த 17-ஆம் தேதி தேசிய மக்கள் கட்சியின் 4 சட்டப்பேரவை உறுப்பினர்களும், மாநில திரிணாமுல் கட்சியில் ஒருவரும் சுயேட்சை எம்.எல்.ஏ ஒருவரும் தங்களது பாஜகவிற்கான ஆதரவை திரும்ப பெற்றனர். ஏற்கெனவே 3 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இருந்து விலகினர். 9 எம்.எல்.ஏக்கள் ஆதரவை இழந்ததால் பா.ஜனதா ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து மேகாலயா முதல் அமைச்சர் சங்மாவின் தலைமையிலான தேசிய மக்கள் கட்சி, டெல்லியில் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் சந்திப்பு நடத்தியது. இதைத்தொடர்ந்து மணிப்பூர் வளர்ச்சிக்காக பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக என்.பி.பி தெரிவித்துள்ளது. இதேபோல என்பிஎஃப்,  எல்ஜேபி ஆகியவையும் ஆதரவு அளித்துள்ளன. இதனால் பாஜக அரசுக்கு ஏற்பட்ட நெருக்கடி தீர்ந்துள்ளது. இதனால் மணிப்பூரில் அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.