இந்தியா

உத்தரப்பிரதேச தேர்தலில் புதிய சாதனை படைத்த பாஜக - என்ன தெரியுமா?

உத்தரப்பிரதேச தேர்தலில் புதிய சாதனை படைத்த பாஜக - என்ன தெரியுமா?

சங்கீதா

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2-வது முறையாக ஆட்சியைப் பிடிப்பதன்மூலம் பாஜகவின் யோகி ஆதித்யநாத் புதிய சாதனை படைத்துள்ளார்.

மொத்தம் 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் ஆட்சி அமைக்க 202 இடங்கள் தேவைப்படுகிறது. இதில் ஆட்சி அமைக்க தேவையான இடங்களை தாண்டி பாஜக முன்னிலை வகிக்கிறது. 267 இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. பாஜகவிற்கு அடுத்ததாக அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 126 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை தாண்டிவிட்டதால் அம்மாநிலத்தில் ஆளும் பாஜகவே மீண்டும் ஆட்சியை அமைக்கிறது. கடந்த 2017-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக கூட்டணி 312 இடங்களில் வென்றது. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி 47 இடங்களிலும், மாயாவதி கட்சி 19 இடங்களிலும் வென்றிருந்தது. மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படும் உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில், கடந்த 2017-ம் ஆண்டு முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் களம் கண்ட பாஜக, தனி பெரும்பான்மை பெற்று வெற்றிகண்டது.

இதையடுத்து யோகி ஆதித்யநாத் முதல்வராக அறிவிக்கப்பட்டார். ஆனால், யோகி ஆதித்யநாத் முதல்வராக பொறுப்பேற்றது முதல் உத்தரப்பிரதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல், சட்டம் ஒழுங்கு சீர்கெடுதல், பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டநிலையில், இந்த ஆண்டு தேர்தலை பாஜக சந்திந்தது.

இதன் தாக்கம் தற்போதைய தேர்தலில் எதிரொலித்துள்ளது. கடந்த சட்டப்பேரவை தேர்தலைப் போன்று அதிக இடங்களில் வெற்றிபெறாதநிலையிலும், 2-வது முறையாக உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. இதனால் பாஜகவின் செல்வாக்கு சற்று பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தல் அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படும்நிலையில், இந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வென்றதன் மூலம் சாதனைகளை படைத்துள்ளது.

கடந்த 1980 மற்றும் 1985-ம் ஆண்டுகளில் நடைபெற்ற உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி இரு முறை தொடர்ந்து ஆட்சி அமைத்தது. அதன்பிறகு தற்போது பாஜக 2017 மற்றும் 2022-ல் பாஜக ஆட்சி அமைக்கிறது. இதேபோல் உத்தரப்பிரதேசத்தில் கடந்த 2017-ம் ஆண்டு பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வென்ற நிலையில் யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்றார்.

தற்போது 2022-ம் ஆண்டு தேர்தலிலும் அவரே முதல்வர் வேட்பாளராக பாஜக சார்பில் களமிறக்கப்பட்டநிலையில், அவரே மீண்டும் முதல்வராக உள்ளார். சுதந்திரத்திற்குப் பின் தொடர்ந்து இருமுறை முதல்வர் என்ற பெருமையை யோகி ஆதித்யநாத் பெற்று சாதனை படைத்துள்ளார். கடந்த 1989-க்குப் பிறகு காங்கிரஸ் கட்சி உத்தரப்பிரதேசத்தில் ஆட்சி அமைக்கவில்லை. எனினும், ஆட்சியில் மாநில கட்சிகளின் கூட்டணியில் அங்கம் வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.