தகிக்கும் மத்தியப் பிரதேச இடைத்தேர்தல் களத்தில், தேர்தல் நடந்த 28 தொகுதிகளில் பாஜக 19 இடங்களிலும், காங்கிரஸ் 8 இடங்களிலும், பி.எஸ்.பி ஓர் இடத்திலும் முன்னிலை வகிக்கிறது. இதனால், ஆளும் பாஜக ஆட்சியைத் தக்கவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிந்தியா vs கமல்நாத்: யாருக்கு அரசியல் எதிர்காலம்?
பீகார் தேர்தல் முடிவுகள் குறித்துதான் நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால், அதைவிட மத்திய பிரதேச அரசியல் களம் நெருப்பாய் தகித்துக்கொண்டிருக்கிறது.
ஆம், மத்தியப் பிரதேசத்தில் நடந்த 28 தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகளும் இன்று வெளியாகி வருகின்றன. ஆளும் பாஜகவும், ஆட்சியை இழந்த காங்கிரஸுக்கும் வாழ்வா, சாவா போராட்டம் என்பதை தாண்டி, இந்த இடைத்தேர்தல் முடிவுகள் கெளரவப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்தப் பிரச்னைகளுக்கு விதை போட்டவர், குவாலியர் சமஸ்தான வாரிசு ஜோதிராதித்யா சிந்தியா.
சில மாதங்களுக்கு முன்பு வரை கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி நடத்தியது. ஆனால், ஆட்சிக்கு எதிராக திடீர் போர்க்கொடி தூக்கிய காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர் ஜோதிராதித்யா சிந்தியா, தனக்கு ஆதரவாக இருந்த 22 எம்.எல்.ஏ.க்களுடன் பாஜகவில் ஐக்கியமானார். அவர்கள் உடன் மேலும் 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் சேர, கமல்நாத் அரசு கவிழ்ந்தது. இதனால், மீண்டும் சிவராஜ் சிங் சவுகான் அரியணை ஏற வித்திட்டார் சிந்தியா.
அதன்படி, காலியாக இருந்த 28 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 3-ம் தேதி நடந்து முடிந்தது. தற்போது ஆட்சி நடத்தி வரும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் பலம் 107.
230 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட மத்தியப் பிரதேசத்தில் பெரும்பான்மை பலம் 116. அப்படிப் பார்த்தால் பாஜக பெரும்பான்மை பெற இன்னும் 9 தொகுதிகளில் வென்றாக வேண்டிய கட்டாயம். அதேநேரம், 88 எம்.எல்.ஏ.க்களை கொண்டுள்ள காங்கிரஸ் சூழ்ச்சியால் இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற 28 தொகுதிகளிலும் வென்றே ஆக வேண்டும். ஒருவேளை 21 தொகுதிகளை வென்றால்கூட, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற்றால் மீண்டும் ஆட்சி கட்டிலை நினைத்துப் பார்க்கலாம். ஆனால், அது குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு கெளரவப் பிரச்னை!
முதல்வர் பதவி கிடைக்காத விரக்தியில்தான் தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்து காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்தார் சிந்தியா. தன்னால் பதவி இழந்த 22 எம்எல்ஏக்களும் வாழ்வு கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் சிந்தியா. அதைவிட காங்கிரஸில் இருந்து விலகியதால் தன்னை ஒரு வலுவான தலைவராக காட்டுவதற்கு கிடைத்த வாய்ப்பாக இந்தத் தேர்தல் அமைந்துள்ளதால், தனது கெளரவப் பிரச்னையாகவே இந்த இடைத்தேர்தலை பார்த்தார் சிந்தியா. இதற்காக தேர்தல் களத்தில் பம்பரமாய் சுழன்று வேலைப் பார்த்தார்.
இதில் சிந்தியாவுக்கு சாதகமான விஷயம் என்னவென்றால், இடைத்தேர்தல் நடைபெற்ற 28 தொகுதிகளில் 16 தொகுதிகள் சிந்தியாவின் குவாலியர், சம்பல் பிராந்தியத்தில் வருகின்றன. சிந்தியா குடும்பத்தின் கோட்டை குவாலியர். எனவே இந்த வெற்றி அவரின் அரசியல் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை தீர்மானிக்க காத்து இருக்கிறது.
இதே நெருக்கடி தான் காங்கிரஸுக்கும். தன்னை விட வயதில் இளையவரிடம் தோற்றுவிடக்கூடாது என்பதற்காக சிந்தியாவுக்கு எதிராக இந்த தேர்தலை பார்த்து வருகிறார் கமல்நாத். ஏற்கெனவே ஈகோ பிரச்னையால்தான் இருவருக்கும் முட்டல் மோதல் ஏற்பட்டது. தற்போது அந்தக் கணக்கை தீர்க்க கமல்நாத் இந்த தேர்தல் முடிவுகள் கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும். ஆனால், தேர்தல் பிரச்சாரத்தின்போது பாஜக பெண் வேட்பாளரை ஐட்டம் என கமல்நாத் பேசியது காங்கிரஸ் கட்சிக்கு தலைகுனிவை ஏற்படுத்தியது.
இதுபோன்ற சில விஷயங்கள் கமல்நாத்துக்கு பாதமாக அமையுமா அல்லது சிந்தியாவை தோற்கடித்து, தான் மட்டும் தான் மத்தியப் பிரதேச காங்கிரஸின் முகம் என்பதை நிரூபிப்பாரா என்பதை இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்து கொள்ளலாம்.