ராகுல் காந்தி pti
இந்தியா

மோடியை பகடி செய்த ராகுல் காந்தி| ’Stand-up காமெடியனாக ஆகிடுங்கள்'.. BJP தலைவர்கள் சாடல்!

மோடியை கேலி செய்வது போல மேடையில் நடித்த ராகுல் காந்தியை பாஜக தலைவர்கள் கடுமையாக சாடியுள்ளனர்.

Rishan Vengai

இந்தூரில் இளைஞர்களை சந்தித்த நிகழ்ச்சியில், மோடியை மிமிக்ரி செய்து பகடி பேசிய ராகுல் காந்தி, பாஜக தலைவர்களின் கோபத்துக்கு உள்ளாகியுள்ளார். ராகுல் கட்சியை விட்டு ஸ்டாண்ட்-அப் காமெடியனாக மாற வேண்டும் என ஃபட்னாவிஸ் கிண்டல் செய்ததுடன், காங்கிரஸ் வேலையிழந்த கட்சியாகிவிட்டது என்றும், ரிஜிஜு அது கோமாளிகளின் கட்சியாக மாறியதாகவும் கடுமையாக தாக்கியுள்ளார்.

மாணவர்களின் முழக்கம் என்ற பெயரிலான நிகழ்ச்சியில் இளம் தலைமுறையினரை மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து வருகிறார். இதில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தனது பேச்சிற்கிடையே பிரபல நகைச்சுவை பேச்சாளர் பல்கிட் மணியுடன் ராகுல் காந்தி உரையாடினார். அப்போது, பிரதமர் மோடி வெளிநாட்டு தலைவர்களிடம் எப்படி நடந்துகொள்வார் என்று செய்துகாட்டி பல்கிட் மணி பேசினார். அவருடன் ராகுலும் சேர்ந்து பிரதமரை கேலி செய்வது போல் பேசியதை மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு, பிரஹலாத் ஜோஷி உள்ளிட்டோர் மற்றும் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கண்டித்துள்ளனர்.

ராகுல் காந்தியின் செயலை விமர்சித்திருக்கும் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், ராகுல் காந்தி மிமிக்ரி செய்யும் விதத்தைப் பார்த்தால். அவர் கட்சியை விட்டு விலகி ஒரு ஸ்டாண்ட்-அப் காமெடியனாக மாற வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது என்று விமர்சித்துள்ளார். மேலும் ராகுல் காந்தியால் காங்கிரஸ் "வேலையிழந்துவிட்டது” என்றும், தான் ஒரு நகைச்சுவைக் கலைஞராக மாறினால் குறைந்தபட்சம் தனக்கு ஏதாவது வேலை கிடைக்கும் என்றும் ஃபட்னாவிஸ் கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேபோல மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, காங்கிரஸ் ஒரு "நகைச்சுவையாளர்கள் மற்றும் கோமாளிகளின் கட்சியாக" மாறிவிட்டது என்று விமர்சித்துள்ளார்.