இந்தியா

உ.பி: ஒவைசி கார்மீது துப்பாக்கிசூடு நடத்தியதாக கைதானவரின் குடும்பத்தை சந்தித்த பாஜக தலைவர்

Veeramani

அசாதுதீன் ஓவைசியின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில் கைதாகி சிறையில் உள்ள தாத்ரியைச் சேர்ந்த சச்சின் சர்மாவின் குடும்பத்தினரை, உத்தரப்பிரதேச மாநில தொழிலாளர் நல வாரியத்தின் தலைவரான சுனில் பரலா நேரில் சென்று சந்தித்தார்.

முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசில் அமைச்சருக்கு இணையான பதவியை வகிக்கும் உத்தரப்பிரதேச மாநில தொழிலாளர் நல வாரியத்தின் தலைவரான சுனில் பரலா, ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசியின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தாத்ரியைச் சேர்ந்த சச்சின் சர்மாவின் குடும்பத்தை நேரில் சென்று சந்தித்தார்.

இது குறித்து பேசிய சுனில் பரலா, "பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும், எந்த ஒரு நிரபராதியும் இப்படி தண்டிக்கப்படக்கூடாது. சச்சின் சர்மாவின் சகோதரர் மற்றும் பெற்றோரை நாங்கள் சந்தித்தோம், அவர்கள் இந்த குற்றத்தில் ஈடுபட்டார்களா என்பது கூட இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. ஒவைசி எப்போதும் மிகவும் ஆக்ரோஷமான மற்றும் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். சச்சின் சர்மாவின் குடும்பத்திற்கு முழு ஆதரவை அளிக்க நாங்கள் உறுதியாக உள்ளோம்" என்று கூறினார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சச்சின் சர்மா, ஏற்கனவே ஒரு கொலை முயற்சியில் குற்றம் சாட்டப்பட்டவர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு நபர் சஹரன்பூரைச் சேர்ந்த விவசாயி சுபம் ஆவார்.

உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்திற்கு சென்றிருந்தபோது ஏஐஎம்ஐஎம் தலைவர் ஒவைசி மீது பிப்ரவரி 3 ஆம் தேதி ஹபூருக்கு அருகில் உள்ள சுங்கச்சாவடியில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அவரது காரின் டயர்கள் பஞ்சராகியது, அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.