இந்தியா

பீகார் தொழிலாளர்கள் விவகாரம்: வதந்தி பரப்பியதாக உ.பி. பாஜக தலைவர் மீது வழக்குப்பதிவு

சங்கீதா

தமிழ்நாட்டில் புலம் பெயர்ந்த பீகார் தொழிலாளர்கள் கொலை செய்யப்பட்டதாக சமூகவலைத்தளத்தில் வதந்தி பரப்பியதற்காக உத்தரப்பிரதேச பாஜக செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

புலம்பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வாட்ஸ் அப்பில் கடந்த வாரம் பல போலி செய்திகள் பகிரப்பட்டன. இதனைத் தொடர்ந்து வடமாநில தொழிலாளர்கள் அச்சம் அடைந்து சொந்த ஊர்களுக்கு திரும்புவதாகவும் செய்திகள் பரவின. ஆனால் ஹோலி பண்டிகையை முன்னிட்டு அவர்கள் சொந்த ஊர் திரும்புவது பின்னர் தெரியவந்தது.

எனினும், பதற்றத்தை குறைக்க, தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தங்கியிருக்கும் பகுதிகளில் காவல்துறையினர் சென்று பேசி வருகின்றனர். அத்துடன் வடமாநில தொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பாக வதந்தி பரப்பினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் இந்த விவகாரத்தில் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153(A) 505(ixb) கீழ் தெய்னிக் பாஸ்கர் பத்திரிக்கையின் ஆசிரியர் மீது ஒரு வழக்கும், திருப்பூர் மாவட்டம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 153(B), 505(ii(b) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டபிரிவு 56(D) கீழ் தன்வீர் போஸ்ட் என்ற பத்திரிகையின் உரிமையாளர் முகமது தன்வீர் என்பவர் மீது ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தலைமறைவாக உள்ள இவர்களை கைது செய்ய தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரின் பெயரில் தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாஜகவின் உத்தரப்பிரதேச மாநில செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ் மீது தமிழ்நாடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த பிரசாந்த் உம்ராவ், “பீகாரில் இருந்து புலம்பெயர்ந்த 12 தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் இந்தியில் பேசியதற்காக தூக்கிலிடப்பட்டனர்.

புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதல்கள் நடந்தபோதிலும், தேஜஸ்வி யாதவ், ஸ்டாலினின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டார்” என்று அவர் பதிவிட்டு இருந்தார். இது சர்ச்சையானதையடுத்து அந்த ட்வீட் நீக்கப்பட்டது. இதையடுத்து வதந்தி பரப்பியதற்காகவும், மாநிலம் மற்றும் மொழி அடிப்படையில் மக்களிடையே பகையை ஏற்படுத்தியதாக பிரசாந்த் உம்ராவ் மீது தமிழக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.