குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், எதிர்க்கட்சிகளின் தவறான வழிநடத்தலால் நாட்டின் தலைநகரில் அமைதி சீர்குலைந்திருப்பதாக குற்றஞ்சாட்டினார். வன்முறைகளுக்கு காரணமான சிறிய அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். கடந்த 57 மாதங்களாக டெல்லி மக்களுக்கு கெஜ்ரிவால் அரசு ஒன்றும் செய்யவில்லை என்றும், கடைசி 3 மாதங்கள் விளம்பரங்கள் செய்வதில் மட்டும் அக்கறை காட்டுவதாகவும் அமித் ஷா குற்றஞ்சாட்டினார்.
முன்னதாக, குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. தற்போதும் ஆங்காங்கே சில போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதற்கிடையே டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை ஏற்பட்டு, பலர் உயிரிழந்ததும், பலர் காயம் அடைந்ததும் குறிப்பிடத்தக்கது.