ரேவந்த் ரெட்டி முகநூல்
இந்தியா

’ராகுல் காந்தி பிரதமராக இருந்தால்...’ ரேவந்த் ரெட்டியின் கருத்தை கிண்டல் செய்த மத்திய அமைச்சர்!

ராகுல் காந்தி பிரதமராக இருந்தால் PoK இந்தியாவின் பகுதி - ரேவந்த் ரெட்டி

ஜெனிட்டா ரோஸ்லின்

காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பிரதமராக இருந்தால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை (PoK) இந்தியா திரும்பப் பெறும் என்று தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியநிலையில், “இது வேடிக்கையாக இருக்கிறது” என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கிண்டல் செய்திருக்கிறார். ரேவந்த ரெட்டி வேறு என்ன பேசினார் பார்க்கலாம்.

நிஜாம்பேட்டையில் நடந்த காங்கிரஸின் 'ஜெய் ஹிந்த் யாத்திரை'யில் பங்கேற்று உரையாற்றிய ரேவந்த் ரெட்டி, “ போர் நிறுத்தத்தை அறிவிப்பதற்கு முன்பு அனைத்து கட்சிகளின் கருத்துக்களையும் கேட்க பிரதமர் மோடி ஏன் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டவில்லை?. மோடி ஒரு 1000 ரூபாய் செல்லாத நோட்டு போன்றவர். இன்று, இந்த நாட்டிற்கு ராகுல் காந்தியின் தலைமை தேவை. ராகுல் காந்தி போன்ற ஒரு தலைவர் இந்த நாட்டின் பிரதமராக இருந்திருந்தால், அவர் (முன்னாள் பிரதமர்) இந்திரா காந்தியை உத்வேகமாக எடுத்துக் கொண்டு, காளியின் (மாதா) வழியில் நடந்து, பாகிஸ்தானை இரண்டு பகுதிகளாக மாற்றி, பாகிஸ்தான் காஷ்மீரை மீண்டும் கைப்பற்றியிருப்பார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் உத்தரவின் பேரில் மோடி அரசாங்கம் பாகிஸ்தானுடான போரை நிறுத்தியுள்ளது. பிரதமர் மோடி கொண்டு வந்த ரஃபேல் போர் விமானங்கள், எத்தனை சுட்டு வீழ்த்தப்பட்டன என்று எந்த விவாதமும் இல்லை. வேறொரு நாட்டிலிருந்து போர் விமானங்களை வாங்கிய பிரதமர் மோடி, எத்தனை ரஃபேல் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியது என்று பதிலளிக்க வேண்டும். உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்களை வழங்கி ரஃபேல் ஜெட் விமானங்களை வாங்கினீர்கள், ஆனால், அவை ஏன் அழிக்கப்பட்டன? இதற்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும்” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், இவரது கருத்தை விமர்சித்துள்ள மத்திய அமைச்சர் ஜிகேந்திர சிங், "ராகுல் காந்தி இந்தியாவின் பிரதமராக இருந்திருந்தால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருக்கும் என்று எந்த காங்கிரஸ் தலைவராவது கூறினால் அது கேட்பதற்கே வேடிக்கையாக இருக்கும்.

ஆனால், ராகுல் காந்தியின் கொள்ளு தாத்தா பண்டிட் ஜவஹர்லால் நேரு இந்தியாவின் பிரதமராக இல்லாமல் இருந்திருந்தால் , பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று ஒன்றே இங்கு இருந்திருக்காது என்பதே உண்மை. அவரது செயல்களின் விளைவாகவே முதலில் நாடு பிரிக்கப்பட்டது, பின்னர் ஜம்மு காஷ்மீர் பிரிக்கப்பட்டது.

இந்தியா-பாகிஸ்தான் போர் நடந்து கொண்டிருந்தபோது, ​​நமது படைகள் பாகிஸ்தான் காஷ்மீரை மீண்டும் வெல்லும் சூழ்நிலையில் இருந்தபோது, ​​அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருதான் யாருடனும் கலந்தாலோசிக்காமல் ஆகாஷ்வானியில் ஒருதலைப்பட்ச போர் நிறுத்தத்தை அறிவித்தார் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ” என்று தெரிவித்தார்.