மஹாராஷ்டிராவில் தேர்தல் முடிவுக்கு முன்பு வரை முதலமைச்சர் ரேஸில், தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோர் இருந்தனர். ஆனால், தேர்தல் முடிவுக்கு பிறகு முதலமைச்சர் ரேஸில் இருந்து அஜித் பவார் விலகியுள்ளார். அவரது தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு முன்பைவிட எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை அதிகரித்து 41ஆக உயர்ந்தாலும், பாஜகவின் செல்வாக்கு பல மடங்கு அதிகரித்துள்ளதால், துணை முதலமைச்சர் பதவியே போதும் என்ற முடிவில் அஜித் பவார் இருப்பதாக கூறப்படுகிறது.
முதலமைச்சர் ரேஸில் இருக்கும் மற்றொரு தலைவரான ஏக்நாத் ஷிண்டே 57 இடங்களில் வெற்றி பெற்றபோதிலும், அவரது கட்சியின் ஆதரவு இல்லாமலேயே, அஜித் பவாரின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. எனவே, ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராகும் வாய்ப்பு குறைந்துள்ளதாக பேசப்படுகிறது.
கடந்த 2022ஆம் ஆண்டு சிவசேனா கட்சியை உடைத்து 40 எம்எல்ஏ-க்களை ஏக்நாத் ஷிண்டே அழைத்து வந்ததால், மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தது. இதனால் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராகவும், பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் துணை முதலமைச்சர் பதவியிலும் அமர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தற்போது பாஜக 132 இடங்களை கைப்பற்றியுள்ளதால், கடந்த கால கட்டாயம் மாறியுள்ளதாகவும், தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதலமைச்சர் பதவியில் அமர வேண்டும் எனவும் அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மகாயுதி கூட்டணியில் சிக்கல்கள் ஏற்படாமல் இந்த மாற்றத்தை நடத்திக்காட்ட பாஜகவின் தேசிய தலைமை ஆலோசனைகளை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஏக்நாத் ஷிண்டே அதிருப்தி அடையாத வகையில் இந்த மாற்றத்தை நடைமுறைப்படுத்த பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மஹாராஷ்டிரா மாநில தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாறியுள்ள அரசியல் சூழலை உணர்ந்து கொண்ட ஏக்நாத் ஷிண்டே முதல் இரண்டரை ஆண்டுகள் தான் முதலமைச்சராக இருப்பதாகவும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சர் பதவியில் அமரட்டும் எனவும் ஆலோசனை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இவற்றையெல்லாம் கடந்து ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஒடிசா, மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் எதிர்பாராத முதலமைச்சர்களை பாஜக அறிவித்தது போல மகாராஷ்டிராவிலும் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.