இந்தியா

94% கார்பரேட் நன்கொடையை வசப்படுத்திய பாஜக -  ஏடிஆர் அறிக்கை

webteam

கார்பரேட் நிறுவனங்கள் தானாக முன்வந்து நன்கொடை அளித்த தொகையில் 94% தொகை பாரதிய ஜனதா கட்சிக்கு சென்றுள்ளதாக ஏடிஆர் அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

ஏடிஆர் என்ற அமைப்பு தேசிய கட்சிகளுக்கு கிடைக்கும் நன்கொடை குறித்த அறிக்கையை ஆண்டுதோறும் வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் இந்த அமைப்பு தற்போது ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் 2016-17 மற்றும் 2017-18 நிதியாண்டில் கட்சிகள் பெற்ற நன்கொடை குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி 2016-18ஆம் ஆண்டு வரை தேசிய கட்சிகளுக்கு மொத்தமாக 985.18 கோடி ரூபாய் பணம் நன்கொடையாக வந்துள்ளது. இதில் மொத்தமுள்ள 6 தேசிய கட்சிகளில் பாஜக 1731 கார்பரேட் நிறுவனங்களிடமிருந்து 915.596 கோடி ரூபாய் பணத்தை நன்கொடையாக பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சி 151 கார்பரேட் நிறுவனங்களிடமிருந்து 55.36 கோடி ரூபாய் பணத்தை நன்கொடையாக பெற்றுள்ளது.

மேலும் இந்த ஆண்டுகளில் கார்பரேட் நிறுவனங்கள் தானாக முன்வந்து 20ஆயிரம் ரூபாய்க்கு மேல் நன்கொடை அளித்ததில் 94% பாஜகவிற்கு சென்றுள்ளது. இதே பிரிவில் காங்கிரஸ் கட்சிக்கு 81% நன்கொடை கிடைத்துள்ளது. அத்துடன் இந்தக் கால அளவில் பான் கார்டு மற்றும் நன்கொடை அளித்தவரின் விவரங்கள் இல்லாமலே 916 கம்பெனிகளிடமிருந்து நன்கொடைகள் தேசிய கட்சிகளுக்கு கிடைத்துள்ளது அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. 

இவற்றில் பான் கார்டு மற்றும் கொடை அளித்தவர்களின் விவரங்கள் ஏதும் இல்லாமல் 98% நன்கொடைகள் பாஜகவிற்கு சென்றுள்ளது. இந்த நன்கொடைகள் மூலம் பாஜகவிற்கு 2.50 கோடி ரூபாய் தொகை கிடைத்துள்ளது. இந்த நிதியாண்டுகளில் கம்யூனிஸ்ட் கட்சி கார்பரேட் நிறுவனங்களிடமிருந்து வெறும் 7 நன்கொடைகளை மட்டுமே பெற்றுள்ளது. அவற்றின் மொத்த அளவு 4 லட்சம் ரூபாயாக உள்ளது. இந்தக் கால அளவில் குறைந்த நன்கொடை பெற்ற தேசிய கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.