இந்தியா

பாஜக முன்னாள் எம்பி செல்ஃபோன் பறிப்பு - இளைஞர்களை தேடி கண்டுப்பிடித்த போலீஸ்

சங்கீதா

தலைநகர் டெல்லியில் பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் எம்பியுமான விஜய் கோயலின் செல்ஃபோன் பறித்த விவகாரத்தில், இரண்டு இளைஞர்களை, போலீசார் ஒரேநாளில் அதிரடியாக கைதுசெய்துள்ளனர்.

பாஜக முன்னாள் எம்பியும், மத்திய அமைச்சருமான விஜய் கோயல், வடக்கு டெல்லியில் நேற்று மாலை தர்யாகஞ்சில் இருந்து, மேல் சுபாஷ் மார்க்கம் வழியாக, செங்கோட்டை நோக்கி காரின் பின்பக்க இருக்கையில் அமர்ந்து சென்றுக் கொண்டிருந்தார். ஜமா மஸ்ஜித் மெட்ரோ நிலையம் அருகே மாலை 6.45 மணியளவில், சிக்னலில் நின்றுகொண்டிருந்தபோது, காரின் ஜன்னல் கதவுகளை இறக்கிவிட்டுவிட்டு யாரிடமோ, விஜய் கோயல் செல்ஃபோன் பேசிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது, அவர் அருகே வந்த மர்மநபர் ஒருவர், அவரின் செல்ஃபோனை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து விஜய் கோயலின் பாதுகாப்பு அதிகாரி அளித்த தகவலின்பேரில் வடக்கு டெல்லி துணை கமிஷனர் சாகர் சிங் கல்சி தலைமையிலான போலீசார், அங்கிருந்த 100 சிசிடிவி காட்சிகளின் மூலம் மர்மநபரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அதில், தலையில் வெள்ளை நிற தொப்பியுடன், நீலநிற சட்டை அணிந்திருந்த நபர் ஒருவர், விஜய் கோயலின் செல்ஃபோனை பறித்துச் சென்றது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அவரை தேடும் பணியில் ஈடுபட்ட போலீசார், தர்யாகஞ்ச் பகுதியைச் சேர்ந்த 22 வயதான சஜன் என்பவர்தான் செல்ஃபோனை பறித்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவரை பிடித்து போலீசார், விசாரணை நடத்தினர். அதில், உத்தரப்பிரதேச மாநிலம் முரதாபாத்தில் வசிக்கும் 23 வயதான முகமது ஆசிஃபிடம் 2,200 ரூபாய்க்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரிடம் இருந்து செல்ஃபோனை பறிமுதல் செய்த துணை கமிஷனர் சாகர் சிங் கல்சி, அவர்கள் இருவரையும் கைதுசெய்தனர். இதில் சஜன்மீது ஏற்கனவே பதியப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. செல்ஃபோன் பறித்தபோது சஜன் அணிந்திருந்த ஆடைகளையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். மேலும் இருவரின் குற்றப்பின்னணி குறித்தும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.