இந்தியா

மகாராஷ்டிரா விவகாரத்தில் இன்று தீர்ப்பு: அடுத்தடுத்து நடந்த அதிரடி நகர்வுகள்

மகாராஷ்டிரா விவகாரத்தில் இன்று தீர்ப்பு: அடுத்தடுத்து நடந்த அதிரடி நகர்வுகள்

webteam

மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைத்த விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவிருக்கும் நிலையில் அடுத்தடுத்து திருப்பங்கள் அரங்கேறியுள்ளன. 

மகாராஷ்டிராவில், பாஜகவுடனான கூட்டணியை முறித்த சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸுடன் இணைந்து ஆட்சியமைக்க தீவிரம் காட்டி வந்தது. இந்நிலையில் திடீர் திருப்பமாக, தேசியவாத காங்கிரஸ் மூத்தத் தலைவர் அஜித் பவாரின் உதவியுடன், பாஜக திடீரென ஆட்சி அமைத்தது. இதற்கு எதிராக சிவேசனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. இந்நிலையில், நேற்று மும்பையில் அடுத்தடுத்து அரசியல் நகர்வுகள் நடந்தேறின.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும் சந்தித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதித்தனர். இச்சந்திப்பை தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் மகளும் எம்பியுமான சுப்ரியா சுலே, சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத், சரத் பவாரின் சகோதரர் பேரனும் பாரமதி எம்எல்ஏவுமான ரோஹித் பவார் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். முன்னதாக மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு ஆதரவு கோரி, சரத் பவாரை, பாரதிய ஜனதா எம்.பி. சஞ்சய் காகடே சந்தித்தார். அப்போது தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஜெயந்த் பாட்டீல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சந்திப்புகள், ஆலோசனைகள் என பகலில் மகாராஷ்டிரா அரசியல் சூடிபிடித்திருந்த நிலையில், மாலையில் அதிரடி காட்சிகள் அரங்கேறின. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தான் தமது தலைவர் என்றும், பாரதிய ஜனதா - தேசியவாத காங்கிரஸ் இணைந்து 5 ஆண்டுகளுக்கு நிலையான ஆட்சி அளிப்பதற்கு பாடுபடப் போவதாகவும் துணை முதல்வர் அஜித் பவார்  டிவிட்டரில் பதிவிட்டார். மேலும் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸில் தான் இருக்கப் போவதாகவும் கூறியிருந்தார். 

இதற்கு விளக்கமளித்துள்ள சரத் பவார், பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், அஜித் பவாரின் ட்விட்டர் அறிக்கை பொய்யானது என்றும் கூறியள்ளார். தனது ட்விட்டர் பதிவில், மக்களிடையே குழப்பத்தை உருவாக்கும் நோக்கில் அஜித் பவார் அறிக்கை வெளியிட்டுள்ளார் என்றும் பவார் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நிலையில், இரவு சுமார் 10 மணியளவில், முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் வீட்டுக்குச் சென்ற துணை முதல்வர் அஜித் பவார், அவருடன் ஆலோசனை நடத்தினார். உச்ச நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் இருவரும் சுமார் 40 நிமிடங்கள் விவாதித்ததாகத் தெரிகிறது. ஆனால், இருவரும் விவசாயிகள் பிரச்னை குறித்து ஆலோசித்ததாக, மகாராஷ்டிரா முதல்வர் அலுவலகம் டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

மேலும், தங்களுக்கு ஆதரவு அளித்த தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மூவரை, பாஜகவினர் சிறப்பு விமானம் மூலம் டெல்லி அழைத்துச் சென்றனர். அதேநேரத்தில் எதிர்முகாமிலும் அதிரடி நடவடிக்கைகள் தொடங்கின.

குதிரை பேரத்தை தடுக்கும் வகையில், தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், போவாய் பகுதியிலிருந்த சொகுசு விடுதியிலிருந்து, வேறு விடுதிக்கு மாற்றப்பட்டனர். இதேபோல, மும்பை விமான நிலைய பகுதியில் உள்ள லலித் விடுதியில் தங்கியிருக்கும் சிவசேனா எம்.எல்.ஏ.க்களும் வேறுவிடுதிக்கு மாற்றப்படுவர் என தகவல் வெளியாகியுள்ளது.