இந்தியா

பாஜக பெற்ற நன்கொடை ஒரே ஆண்டில் 7 மடங்காக உயர்வு

Rasus

கடந்த 2016-17-ஆம் நிதியாண்டில் பாஜக கட்சி மொத்தமாக 532.27 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளது. இந்தத் தொகை, பாஜக அதற்கு முந்தைய நிதியாண்டில் பெற்ற நன்கொடையை விட 7 மடங்கு அதிகம் ஆகும். இது காங் பெற்ற நன்கொடையைவிட 9 மடங்கு அதிகம் என்றும் தெரிய வந்துள்ளது.

2016-17 ஆம் நிதியாண்டில் அரசியல் கட்சிகள் எவ்வளவு நன்கொடைகள் பெற்றிருக்கின்றன என்ற விவரம் தெரியவந்துள்ளது. ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏ.டி.ஆர்) மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கையில் 20,000 ரூபாய்க்கு மேல் நன்கொடைகள் பெற்ற தேசிய அரசியல் கட்சிகளின் விவரங்கள் தெரியவந்துள்ளன.

தேசிய கட்சிகள் மொத்தமாக 589.38 கோடிக்கு நன்கொடைகள் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பாரதிய ஜனதா கட்சி மட்டும் 532.27 கோடி நன்கொடை பெற்றிருப்பதாகவும், அதற்கு அடுத்தப்படியாக காங்கிரஸ் கட்சி 41.90 கோடி நன்கொடை பெற்றிருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாதி கட்சி கடந்த நிதியாண்டில் 20,000 ரூபாய்கும் மேல் நன்கொடை பெறவில்லை என தெரிவித்துள்ளது.

கடந்த 2015- 16ம் நிதியாண்டை காட்டிலும் இந்த 2016- 2017-ஆம் நிதியாண்டில் பாஜக பெற்றுள்ள நன்கொடை 7 மடங்காக அதிகரித்துள்ளது. 2015- 16ம் நிதியாண்டில் பாஜக பெற்ற நன்கொடை 76.85 கோடி. அதேசமயம் 2016- 2017-ஆம் நிதியாண்டில் பாஜக பெற்ற நன்கொடை 532.27 கோடி ஆகும். காங்கிரஸ் கட்சி 2016- 17-ஆம் நிதியாண்டில் பெற்ற நன்கொடை 41.9 கோடி ஆகும். ஆனால் கடந்த 2015-16-ம் நிதியாண்டில் பெற்ற நன்கொடை 20.42 கோடி ஆகும். தற்போது காங்கிரஸ் கட்சியின் நன்கொடை 2 மடங்காக அதிகரித்துள்ளது.