இந்தியா

குஜராத்தில் பா.ஜ.கவின் தொடர் வெற்றி

குஜராத்தில் பா.ஜ.கவின் தொடர் வெற்றி

webteam

கடந்த 22 ஆண்டுகளாக குஜராத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி, பாரதிய ஜனதா பெற்ற வாக்குகளை விட சுமார் 10 சதவீதம் குறைவாகவே பெற்றிருக்கிறது.

1995 முதல் குஜராத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களிலும் பாரதிய ஜனதாவே வெற்றி பெற்றிருக்கிறது. இந்த ஐந்து தேர்தல்களிலுமே காங்கிரஸ் கட்சியை விட, பாரதிய ஜனதா சராசரியாக 10 சதவீதம் வாக்குகளை கூடுதலாக பெற்றுள்ளது. 1995ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 42.51 சதவீத வாக்குகளைப் பெற்று 121 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சியால் 32.86 சதவீதம் வக்குகள் மட்டுமே பெற முடிந்தது. 

அதற்கு அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்திற்கு நடபெற்ற தேர்தலில் இரண்டு கட்சிகளுமே சுமார் 10 சதவீதம் அதிக வாக்குகளை பெற்றன. பின்னர் 1998ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா 44.81 சதவீதம் வாக்குகளை கைப்பற்றி 117 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அப்போதும் காங்கிரஸ் கட்சி பாரதிய ஜனதாவை விட10 சதவீதம் குறைவாக 34.85 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற்று 53 தொகுதிகளில் வெற்றிப் பெற்றது. 

2002ம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் பாரதிய ஜனதா 49.85 சதவீதம் வாக்குகளைப் பெற்று ஆட்சியமைத்தது. காங்கிரஸ் கட்சியோ அதைவிட பத்து சதவீதம் குறைவாக 39.28 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது. பின்னர் 2007ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாரதிய ஜனதா 49.12 சதவீத வாக்குகளை பெற்று 117 தொகுதிகளை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சியால் 38 சதவீத வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. 

2012ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாரதிய ஜனதா காங்கிரஸை விட சுமார் பதினோரு சதவீதம் அதிகமாக வாக்குகளை பெற்று 115 இடங்களில் வெற்றி பெற்றது. 2014ம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலோ மோடி அலை காரணமாக பாரதிய ஜனதா காங்கிரஸை விட சுமார் 27 சதவீதம் அதிக வாக்குகளை பெற்றது. எனவே இந்த வாக்கு சதவீத வித்தியாசத்தின் அடிப்படையில் பார்க்கும்போது பாரதிய ஜனதா வெற்றி பெறுவதற்கே வாய்ப்புகள் அதிகம் என நோக்கர்கள் கூறுகின்றனர். 

ஆனால் தேர்தல் வெற்றியை கடந்தகால புள்ளிவிவரங்களின் அடிப்படையில் மட்டுமே முடிவு செய்துவிட முடியாது. அரசுக்கு எதிரான மனநிலை, பணமதிப்பு நீக்க நடவடிக்கை, ஜிஎஸ்டி போன்ற நடவடிக்கைகள் மற்றும் காங்கிரஸ் கட்சி அமைத்த கூட்டணி போன்றவை தேர்தலில் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்தி 22 ஆண்டு வரலாற்றை மாற்றியமைக்குமா என்பதை சற்று நேரத்தில் தொடங்கவிருக்கும் வாக்கு எண்ணிக்கைக்குப் பின் தெரிந்துகொள்ளலாம்,