இந்தியா

பாஜக பிரமுகர் தஜிந்தர் பால் சிங் பக்காவை கைது செய்த இடைக்கால தடை

JustinDurai

பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் தஜிந்தர் பால் சிங் பக்காவை கைது செய்ய நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

டெல்லியை சேர்ந்த பாஜக பிரமுகர் தஜிந்தர் பால் சிங் பக்கா மத மோதல்களை தூண்டும் விதமாக பேசியதாகக் கூறி பஞ்சாப் போலீசார் அவரை வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். டெல்லியில் கைது செய்யப்பட்ட பக்கா, ஹரியானா மாநிலம் வழியாக பஞ்சாப் கொண்டு செல்லப்படும்போது டெல்லி காவல் துறையினர் அவரை மீட்டு சென்றனர். பக்காவை பஞ்சாப் காவல் துறையினர் கடத்திச் சென்றதாகவும் எனவேதான் அவரை மீட்டதாகவும் டெல்லி காவல் துறை விளக்கம் அளித்தது.

இந்நிலையில் வழக்கு விசாரணைக்கு ஆஜராக பக்காவை 5 முறை அழைத்தும் அவர் வரவில்லை என்றும் எனவே அவரை பிணையில் வர இயலாத பிரிவில் அவரை மீண்டும் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் பஞ்சாப் மாநிலம் மொகாலி நீதிமன்றத்தில் அம்மாநில காவல் துறையினர் முறையிட்டனர். இதை ஏற்ற நீதிபதி பக்காவை பிணையில் வர இயலாத பிரிவின் கீழ் கைது செய்து வரும் 23 ஆம் தேதிக்குள் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

டெல்லி போலீசார் பக்காவை வலுக்கட்டாயமாகவும் சட்டவிரோதமாகவும் தங்கள் பிடியிலிருந்து மீட்டுச்சென்றதாக பஞ்சாப் காவல் துறையினர் தங்கள் மனுவில் கூறியிருந்தனர். இதற்கிடையே பக்காவை சீக்கியர்களுக்கான தலைப்பாகையை அணியக் கூட விடாமல் கைது செய்ததாகக் கூறி பஞ்சாப் அரசிடம் தேசிய சிறுபான்மையினர் நலத்துறை விளக்கம் கேட்டுள்ளது.

இதனிடையே தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பக்கா பஞ்சாப், ஹரியானா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வரும் மே 10ஆம் தேதி வரை அவரது கைதுக்கு தடை விதித்தார்.  நீதிபதி மேலும் கூறுகையில், "பாக்காவின் மனு இந்த விவகாரத்தின் முக்கிய வழக்குடன் இணைக்கப்பட்டுள்ளது, அந்த வழக்கு மே 10ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. அதுவரை, தஜிந்தர் பக்கா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது" என்று உத்தரவிட்டார்.

இதையும் படிக்கலாம்: தீண்டாமை வன்கொடுமை - தமிழகத்தில் எந்த மாவட்டத்துக்கு முதலிடம்?