டெல்லி தேர்தல் முகநூல்
இந்தியா

டெல்லி தேர்தல்: சிறுபான்மையினர் ஆதரவு தொகுதிகளிலும் பாஜக வெற்றி!

பல விவகாரங்களில் அரவிந்த் கெஜ்ரிவால் பாஜகவின் சிறுபான்மையினர் விரோத கொள்கைகளை எதிர்க்கவில்லை என இஸ்லாமியத் தலைவர்கள் கருதுகின்றனர்.

PT WEB

டெல்லி சட்டமன்ற தேர்தலில், சிறுபான்மையினர் ஆதிக்கம் வலுவாக உள்ள தொகுதிகள் பெரும்பாலும் ஆம் ஆத்மி கட்சி வசம் சென்றாலும், ஒரு சில தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி இந்த முறை வெற்றி பெற்றுள்ளது.

டெல்லியில் முஸ்தபாபாத், மங்கோல் பூரி, தீமார்பூர், கரவல் நகர் மற்றும் திரிலோக்புரி ஆகிய தொகுதிகளில் கணிசமான எண்ணிக்கையில் சிறுபான்மையினர் இருந்தாலும், பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதற்குக் காரணம் "கவுண்டர் போலரைசேஷன்" எனப்படும் எதிர்மறை தாக்கம் என டெல்லி அரசியல் தலைவர்கள் கருதுகிறார்கள்.

மேலும் ஆம் ஆத்மி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அதிகரித்துள்ள அதிருப்தியும் இன்னொரு காரணமாக அமைந்துள்ளது. பல விவகாரங்களில் அரவிந்த் கெஜ்ரிவால் பாஜகவின் சிறுபான்மையினர் விரோத கொள்கைகளை எதிர்க்கவில்லை என இஸ்லாமியத் தலைவர்கள் கருதுகின்றனர். பொது சிவில் சட்டம் இதற்கு ஒரு உதாரணமாக குறிப்பிடப்படுகிறது.

காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதற்கும் கெஜ்ரிவால் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் காங்கிரஸ், அகில இந்திய மஜ்லிஸ் கட்சி ஓரளவு சிறுபான்மையினர் வாக்குகளை பிரித்ததும் பாரதிய ஜனதா கட்சிக்கு உதவிகரமாக அமைந்ததாக கருதப்படுகிறது. ஆகவே தான் 36 சதவிகிதம் இஸ்லாமியர் வசிக்கும் முஸ்தபாபாத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது என டெல்லியின் அரசியல் தலைவர்கள் கருதுகிறார்கள்.

அதே சமயத்தில் 50 சதவீதம் இஸ்லாமியர் வசிக்கும் சீலம்பூர் தொகுதி, 48 சதவீதம் இஸ்லாமியர் வசிக்கும் மதியா மகால் தொகுதி, 43 சதவிகிதம் இஸ்லாமியர் வசிக்கும் ஓக்லா தொகுதி, 38 சதவீதம் இஸ்லாமியர் வசிக்கும் பள்லிமரான் தொகுதி, மற்றும் 35 சதவிகிதம் இஸ்லாமியர் வசிக்கும் பாபர்பூர் தொகுதி ஆகியவற்றில் ஆம் ஆத்மி கட்சியே வெற்றி பெற்றுள்ளது.

பெரும்பாலான இஸ்லாமியர் ஆதிக்கம் உள்ள தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சியே வெற்றி பெற்றுள்ளது. சிறுபான்மையினர் அதிகம் உள்ள ஒரு சில தொகுதிகள் மட்டுமே நரேந்திர மோடி அலையில் பாஜக வசம் சென்றுள்ளன. மக்களவை தேர்தலில் தொடர்ச்சியாக மூன்று முறை டெல்லியில் உள்ள அனைத்து 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி மீது அதிருப்தி இருந்தாலும், காங்கிரஸ் கட்சியால் தற்போது பாஜகவை தோற்கடிக்க இயலாது என்கிற கள நிலவரத்தை மனதில் கொண்டே பெரும்பான்மையான இஸ்லாமிய சமுதாய வாக்காளர்கள் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மீண்டும் ஆதரவு அளித்துள்ளனர்.