இணையத்தில் வைரலாகி வரும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு, நாளுக்கு நாள் ஆதரவு பெருகிவரும் நிலையில், மறுபுறம் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. அதன் 50 சதவிகித ஆதரவாளர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என பாஜக குற்றம்சாட்டியுள்ளது. அதன் உண்மை என்ன? விவரிக்கிறது, இந்தக் கட்டுரை.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், வழக்கு ஒன்றின் விசாரணையின்போது சொன்ன கருத்துகளின் பின்னணியில், அபிஜீத் திப்கே என்பவரால் இன்ஸ்டா பக்கத்தில் 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’என்ற பக்கத்தைத் தொடங்கினார். அதில் வேடிக்கையான பதிவுகள் பதிவிடப்பட்ட நிலையில், பலரும் அதனைப் பின்தொடரத் தொடங்கினர். ஒருகட்டத்தில், பாஜகவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தையே அது விஞ்சியது. இதனால், மத்திய அரசுக்கு தடை விதித்தது. எனினும், மீண்டும் அதே பெயரில் ஒரு புதுப் பக்கம் தொடங்கப்பட்டது. தவிர, அந்தப் பக்கமும் இணையத்தில் வேகம்பிடித்து வருகிறது.
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி இந்தியாவில் சமூக ஊடகங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவரும் நிலையில், அக்கட்சியின்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும் வைக்கப்பட்டு வருகின்றன. பாஜவைச் சேர்ந்த சிலர், “அந்தக் கட்சியின் 50% ஆதரவாளர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும், அதன் நிறுவனர் ஒரு ஐஎஸ்ஐ ஏஜெண்ட்” என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.
குறிப்பாக, பாஜக யுவ மோர்ச்சாவின் பொதுச் செயலாளர் தஜிந்தர் பக்கா, அதற்கான தரவுகளையும் பகிர்ந்துள்ளார். அதன்படி, கட்சியின் இன்ஸ்டாகிராம் பின்தொடர்பாளர்களில் 49% பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும், அமெரிக்கா மற்றும் பங்களாதேஷைச் சேர்ந்தவர்கள் தலா 14% எனவும் மேலும் இந்த தரவுகளின்படி, இந்தியா வெறும் 9% பின்தொடர்பாளர்களுடன் நான்காவது இடத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
ஆனால், அக்கட்சியின் நிறுவனரான அபிஜீத் திப்கே இதை மறுத்துள்ளார். தொடர்ச்சியான கேள்விகளுக்குப் பதிலளித்து, குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்கும் அபிஜீத்,‘அக்கட்சியைப் பின்தொடர்பவர்களில் 94% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்றும், அதைத் தொடர்ந்து அமெரிக்கா (1%) மற்றும் இங்கிலாந்து (0.7%) ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்’எனவும் தெரிவித்துள்ளார்.
எனினும், இருதரப்பும் இதன் உண்மைத்தன்மையை வெளியிடவில்லை. அதேபோல், இதுவரை, மெட்டாவோ அல்லது இன்ஸ்டாகிராமோ எந்த அதிகாரப்பூர்வ தரவையும் வெளியிடவில்லை.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் அப்பக்கத்தைத் தொடங்கிய அபிஜீத் திப்கே, ’ஒரு ஐஎஸ்ஐ ஏஜெண்ட்’ எனச் சொல்லப்படுவதுதான் விவாத்தை ஏற்படுத்தியுள்ளது. புனேவைச் சேர்ந்த அபிஜீத், தற்போது அமெரிக்காவில் வசித்துவரும் நிலையில், இதுகுறித்த சட்ட உரிமைகள் கண்காணிப்பகம், 2019-இல் தாக்கல் செய்த ஒரு புகாரை, பாஜக தலைவர் தஜிந்தர் பக்கா உட்பட பல பயனர்கள் பகிர்ந்துள்ளனர். பாகிஸ்தான் சார்பு கருத்துகளை அவர் பதிவிட்டதாக அந்தப் புகார் தெரிவிக்கிறது. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமான யுஏபிஏ-வின் கீழ் அவரைக் கைது செய்யுமாறு புனே காவல்துறைக்கு உள்ளூர் ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், அந்தப் புகார் மேற்கொண்டு விசாரிக்கப்படவில்லை எனவும், அது இன்றுவரை ஒரு குற்றச்சாட்டாகவே நீடிக்கிறது எனவும் தரவுகள் கூறுகின்றன. இவையனைத்தும், அவர் ஆம் ஆத்மி கட்சியில் இருந்தபோது பதியப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இப்படி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் பக்கத்திற்கு பின்னணியில் பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டாலும், அது நாளுக்கு நாள் வைரலாகி வருகிறது என்பதுதான் உண்மை.