இந்தியா

உ.பி.யில் அனைத்து இடங்களிலும் பாஜகவுக்கு தோல்விதான் - தேஜஸ்வி

உ.பி.யில் அனைத்து இடங்களிலும் பாஜகவுக்கு தோல்விதான் - தேஜஸ்வி

webteam

உத்தரப்பிரதேசத்தில் அனைத்து இடங்களிலும் மாயாவதி - அகிலேஷ் யாதவ் கூட்டணி வெற்றிப் பெறும் என பீகாரின் முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதியும், மாயாவதியின் பகுஜன் சமாஜும் அம்மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளில் தலா 38 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் செல்வாக்குள்ள ராகுல், சோனியாவின் அமேதி, ரபேலி தொகுதிகளில் போட்டியில்லை என்று அறிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்பதை மாயாவதி தெளிவுப்படுத்தினார். அதற்கு அகிலேஷ் யாதவ் வழிமொழிந்தார்.

இதையடுத்து உத்தரப் பிரதேசத்தில் போட்டியிடுவது தொடர்பாக காங்கிரஸின் உயர்மட்டக் குழுக் கூட்டம் லக்னோவில் கூடியபோது கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 80 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியை சந்தித்து கூட்டணிக்கு வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தேஜஸ்வி, உத்திரபிரதேசத்தில் அனைத்து இடங்களிலும் மாயாவதி - அகிலேஷ் யாதவ் கூட்டணி வெற்றி பெறும் என தெரிவித்தார். மேலும் உத்திரபிரதேசத்திலும் பீகாரிலும் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது என தெரிவித்தார்.

அகிலேஷ்யாதவ் - மாயாவதி கூட்டணியை மக்கள் வரவேற்பதாக குறிப்பிட்ட அவர், மோடி மீது தனக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை எனவும் சித்தாந்தத்தின் மீதே கருத்து மோதல் உள்ளது எனவும் கூறினார்.