இந்தியா

பீகார் அரசியலில் திருப்பம்: பாஜக- ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி முறிந்தது

Sinekadhara

பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி முடிவுக்கு வருகிறது எனவும், புதிய கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளதாகவும் நிதிஷ்குமார் தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவித்திருக்கிறார்.

பீகாரில் பாஜகவுடன் கூட்டணியை முறித்தார் நிதிஷ்குமார். லாலு பிரசாத்தின் கட்சியுடன் சேர்ந்து நிதிஷ்குமார் மீண்டும் ஆட்சியமைக்க முடிவு செய்துள்ளார். இதனையடுத்து, மாலை 4 மணிக்கு ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளிக்கவுள்ளார் முதல்வர் நிதிஷ் குமார். மேலும் ஆதரவளிக்கும் கட்சிகளின் கடிதத்தை அளித்து மீண்டும் ஆட்சியமைக்க கோரிக்கை விடுப்பார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பீகார் சட்டமன்றத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 45 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த கட்சி பாஜகவின் 77 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சியமைத்திருந்தது.

இத்தகைய சூழலில் பாஜகவுடன் கூட்டணியை முறித்து 79 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைக்க நிதிஷ்குமார் முடிவு செய்துள்ளார். இவைதவிர காங்கிரஸ் கட்சியின் 19 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 12 இடதுசாரி கட்சி உறுப்பினர்கள் இந்த கூட்டணிக்கு ஆதரவு அளிப்பார்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேஜஸ்வி யாதவிற்கு துணை முதலமைச்சர் பதவி எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நிதிஷ் குமாரை பிரதமர் வேட்பாளராக்க எதிர்க்கட்சிகள் திட்டம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.